மேல ஆழ்வார்தோப்பு ராமசுவாமி கோவில் ஆவணி கொடை விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
மேல ஆழ்வார்தோப்பு ராமசுவாமி கோவிலில் ஆவணி கொடை விழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தென்திருப்பேரை,
மேல ஆழ்வார்தோப்பு ராமசுவாமி கோவிலில் ஆவணி கொடை விழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ராமசுவாமி கோவில்
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த கோவில்களில் ஒன்றான மேல ஆழ்வார்தோப்பு ராமசுவாமி கோவில், பத்திரகாளி அம்மன், மாரியம்மன் கோவிலில் ஆவணி கொடை விழா கடந்த 11-ந்தேதி இரவில் வில்லிசையுடன் தொடங்கியது. தொடர்ந்து சுவாமிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. 12-ந்தேதி இரவில் வில்லிசை, சுவாமிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது.
விழாவின் சிகர நாளான நேற்று முன்தினம் ஆவணி கொடை விழா நடந்தது. காலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். மதியம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது.
சப்பர பவனி
மாலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இரவில் கரகாட்டம், பட்டிமன்றம், வில்லிசை நடந்தது. பின்னர் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து ராமபிரான்-சீதாபிராட்டி, லட்சுமண பெருமாளுடன் மலர் அலங்கார பொன் சப்பரத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் வாணவேடிக்கை நடந்தது. விழாவை முன்னிட்டு, காலை, மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பொங்கலிடுதல்
நேற்று காலையில் மஞ்சள்பால் பொங்கலிடுதல், கோவிலில் ஊர்மக்கள் பொங்கலிடுதல், மதியம் சுவாமிக்கு அலங்கார பூஜை நடந்தது. இரவில் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
விழாவின் நிறைவு நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் மக்கள் செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story