ஜக்கி வாசுதேவ் மோட்டார் சைக்கிள் பயணக்குழு இன்று புதுச்சேரி வருகை


ஜக்கி வாசுதேவ் மோட்டார் சைக்கிள் பயணக்குழு இன்று புதுச்சேரி வருகை
x
தினத்தந்தி 15 Sept 2019 3:15 AM IST (Updated: 15 Sept 2019 1:44 AM IST)
t-max-icont-min-icon

‘காவிரி கூக்குரல்’ இயக்கத்தை நடத்தும் ஜக்கி வாசுதேவின் மோட்டார் சைக்கிள் பயணக் குழுவினர் இன்று புதுச்சேரி வருகின்றனர்.

புதுச்சேரி,

தென்னிந்தியாவின் உயிர்நாடியான காவிரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்காக ‘காவிரி கூக்குரல்’ என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தொடங்கி உள்ளார். இந்த இயக்கத்தின் மூலம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள காவிரி நதிப் படுகையில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தமிழகம், கர்நாடக மாநில அரசுகள் மற்றும் விவசாயிகளின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக தலைகாவிரி முதல் திருவாரூர் வரையிலான மோட்டார் சைக்கிள் பயணத்தை அவர் கடந்த 3-ந்தேதி தலைகாவிரியில் தொடங்கினார்.

பின்னர், மடிகேரி, ஹன்சூர், மைசூரு, மண்டியா, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு ஊர்கள் வழியாக கடந்த 11-ந்தேதி தமிழக எல்லையான ஓசூர் அருகே உள்ள அத்திப்பள்ளியை வந்தடைந்தார். அதைத் தொடர்ந்து, தர்மபுரி, மேட்டூர், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் வழியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதுச்சேரி வருகிறார்.

இதையொட்டி இன்று காலை 7.30 மணிக்கு கம்பன் கலையரங்கத்தில் நடக்கும் பொதுநிகழ்ச்சியில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

நிகழ்ச்சியில் முதல்- அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், எம்.பி.க்கள் கோகுலகிருஷ்ணன், வைத்திலிங்கம், அன்பழகன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர்.

அதைத்தொடர்ந்து கவர்னர் மாளிகையில் காலை 8.30 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியிலும் ஜக்கி வாசுதேவ் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பெடி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதன்பின் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.
1 More update

Next Story