தேனி வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.1½ லட்சம் மோசடி


தேனி வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.1½ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 15 Sept 2019 4:00 AM IST (Updated: 15 Sept 2019 1:54 AM IST)
t-max-icont-min-icon

தேனி வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.1½ லட்சம் மோசடி செய்த பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேனி,

தேனி பழைய அரசு மருத்துவமனை சாலையில் உள்ள வ.உ.சி. தெருவை சேர்ந்த வேல்முருகன் மனைவி கற்பகசெல்வி (வயது 49). இவர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தேனியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் 10 பவுன் எடையுள்ள 8 வளையல்களை அடகு வைத்து ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். ஆனால், அந்த கடனுக்கான வட்டியை திருப்பிச் செலுத்தாமல் இருந்துள்ளார். ஒரு ஆண்டு கடந்த நிலையில் வட்டியுடன் ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்து 636 செலுத்த வேண்டும் என்று அவருக்கு வங்கி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது.

ஆனாலும், அவர் பணத்தை திருப்பிச் செலுத்த வில்லை. இதனால் வங்கி ஊழியர்கள், அவருடைய முகவரிக்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் அந்த முகவரியில் இல்லை. இதையடுத்து அவர் அடகு வைத்த நகைகளை சோதனை செய்தபோது அது போலி நகைகள் என தெரியவந்தது. எனவே இது குறித்து வங்கியின் மேலாளர் கவுரிசங்கர் தேனி மாவட்ட குற்றப்பிரிவில் புகார் செய்தார். அதன்பேரில் கற்பகசெல்வி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் கற்பகசெல்வி மீது இதேபோன்று, போலி நகைகளை அடகு வைத்தது தொடர்பாக தேனி போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும், மாவட்ட குற்றப்பிரிவில் 2 வழக்குகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதும், இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்என்பதும்தெரியவந்தது.

இதையடுத்து தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கிலும் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மேலும் ஏதேனும் வங்கிகளில் போலி நகைகள் அடகு வைத்து மோசடி செய்துள்ளாரா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story