குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் ரூ.287¾ கோடியில் குடியிருப்புகள் கட்டும் பணி - கலெக்டர் தகவல்


குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் ரூ.287¾ கோடியில் குடியிருப்புகள் கட்டும் பணி - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 15 Sept 2019 4:45 AM IST (Updated: 15 Sept 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் ரூ.287¾ கோடி மதிப்பில் 2 ஆயிரத்து 925 குடியிருப்புகள் கட்டும் பணிகள் நடந்து வருவதாக கலெக்டர் தெரிவித்தார்.

தேனி,

தேனி மாவட்டம், கோம்பை பேரூராட்சிக்கு உட்பட்ட கருக்கோடை பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் 480 வீடுகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை தரமாகவும், குறிப்பிட்ட காலத்துக்குள்ளும் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

ஆய்வைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறியதாவது:-

தேனி மாவட்டத்தில் நகர்ப்புற பகுதிகளில் நீர்நிலை புறம்போக்கு நிலங்கள், சாலைகள் மற்றும் ரெயில்வே புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்து வரும் நபர்கள் மாவட்ட நிர்வாகத்தால் கண்டறியப்பட்டு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் மறுகுடியமர்வு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்டம் முழுவதும் மொத்தம் 4,051 குடிசைகள் கண்டறியப்பட்டு, அவர்கள் பயன்பெறும் வகையில், இடம் தேர்வு செய்யப்பட்டு, வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அடுத்த ஓராண்டுக்குள் பணிகள் முடிக்கப்பட்டு, பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி உத்தமபாளையம் கருக்கோடை பகுதியில் ரூ.47 கோடியே 99 லட்சம் மதிப்பில் 480 குடியிருப்புகள், தேனி வடவீரநாயக்கன்பட்டி பகுதியில் ரூ.31 கோடியே 17 லட்சம் மதிப்பில் 312 குடியிருப்புகள், தப்புக்குண்டு பகுதியில் ரூ.43 கோடியே 2 லட்சம் மதிப்பில் 431 குடியிருப்புகள், தேனிஅல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட குறவர்கள் காலனி பகுதியில் ரூ.16 கோடியே 63 லட்சம் மதிப்பில் 175 குடியிருப்புகள், சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அப்பிபட்டி பகுதியில் ரூ.43 கோடியே 13 லட்சம் மதிப்பில் 432 குடியிருப்புகள் உள்பட மொத்தம் மாவட்டம் முழுவதும் ரூ.287 கோடியே 86 லட்சம் மதிப்பில், 2 ஆயிரத்து 925 குடியிருப்புகள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் தலைமைப் பொறியாளர் ராஜசேகர், உதவி பொறியாளர் முனியசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story