ரூ.4½ கோடியில் 30 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்
ஜல்சக்தி அபியான் திட்டத்தின் மூலம் ரூ.4½ கோடியில் 30 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கலெக்டர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.
கலசபாக்கம்,
திருவண்ணாமலை மாவட்டத்தில் ‘ஜல்சக்தி அபியான்’ திட்டத்தின் சார்பில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன் மூலம் மரக்கன்றுகள் நடுதல், மழைநீர் கட்டமைப்பு அமைத்தல், நீர்நிலைகள் தூர்வாருதல் போன்றவை செய்யப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஒன்றியங்களில் சுமார் 375 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.4½ கோடி மதிப்பில் 30 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று துரிஞ்சாபுரம் ஒன்றியம் வள்ளிவாகை ஊராட்சி வேடியப்பன் நகர் முருகன் கோவில் பின்புறம் உள்ள அரசு நிலத்தில் முதற்கட்டமாக சுமார் 4 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தொடங்கி வைத்தார்.
இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர். இதில் வேங்கை, பூவரசன், கொய்யா, நாவல் உள்பட 12 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் ஸ்ரீதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், விஜயலட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story