பேனர் கலாசாரத்தை தடுக்க அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும் திருச்சியில் திருமாவளவன் எம்.பி. பேட்டி


பேனர் கலாசாரத்தை தடுக்க அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும் திருச்சியில் திருமாவளவன் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 15 Sep 2019 11:15 PM GMT (Updated: 15 Sep 2019 4:20 PM GMT)

பேனர் கலாசாரத்தை தடுக்க தமிழக அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று திருச்சியில் திருமாவளவன் எம்.பி. கூறினார்.

செம்பட்டு,

5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்து இருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. இது ஏழை, எளிய பள்ளி மாணவர்களை மேற்படிப்புக்கு செல்ல விடாமல் வெளியேற்றுவதற்கான முயற்சி. இந்த முயற்சிக்கு தமிழக அரசு துணைபோவது வேதனை அளிக்கிறது. இந்த விஷயத்தில் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து கடுமையாக எதிர்க்க வேண்டும்.

ஒரே நாடு, ஒரே மொழி என்பதெல்லாம் பா.ஜ.க.வின் நீண்ட நாளைய கனவு. இது இந்தியாவை துண்டாடும் ஒரு முயற்சி. ஒரே தேசம், ஒரே மதம், ஒரே மொழி என்பதை முன்மொழிந்து இருக்கிறார்கள். இந்த ஆபத்தான போக்கு இந்திய தேசத்தை பல கூறுகளாக சிதறடிக்கும். தமிழகத்தில் சுபஸ்ரீ மரணத்துக்கு பிறகு, பேனர் வைப்பதில்லை என்ற முடிவை தி.மு.க. உள்பட தோழமைக்கட்சிகள் எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.

பேனர் கலாசாரம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த கருத்தினை நீண்டகாலமாக சொல்லி வருகிறது. அரசியல் நிகழ்ச்சிகளுக்காக பிரமாண்டத்தை உருவாக்க வேண்டும் என்ற பெயரில் 100-க்கணக்கான பேனர்களை வைப்பது கலாசாரமாக மாறி இருக்கிறது. இதில் ஆளும் கட்சிக்கு ஒரு அணுகுமுறை, மற்ற கட்சிகளுக்கு ஒரு அணுகுமுறை என காவல்துறை நடந்து வருகிறது.

பேனர் வைக்கும் கலாசாரத்தை தடுக்கும் வகையில் தமிழக அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும். ரேஷன் கடை என்ற பொது வினியோக திட்டத்தை அழிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கம். கார்ப்பரேட் நிறுவனங்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக பொருளாதார கொள்கையை வகுத்து அதன் விளைவாக ஏற்படக்கூடிய பின்விளைவுகள் தான் இதுபோன்ற செயல்பாடுகள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story