ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமை: நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது


ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமை: நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 16 Sept 2019 4:00 AM IST (Updated: 16 Sept 2019 1:12 AM IST)
t-max-icont-min-icon

ஆவணி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமையில் சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம். இதே போல இந்த ஆண்டும் நாகராஜா கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்து வந்தன.

இந்த நிலையில் நேற்று ஆவணி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாகராஜா கோவிலில் அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்தனர். குமரி மாவட்டத்தில் பல இடங்களில் இருந்தும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்ததால் கோவிலில் கூட்டம் அலைமோதியது. ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து நாகராஜரை தரிசனம் செய்தனர்.

பால் ஊற்றி வழிபாடு

முன்னதாக கோவில் வளாகத்தில் உள்ள அரச மரத்தை சுற்றி இருக்கும் நாகர் சிலைகளுக்கு பக்தர்கள் பால் ஊற்றியும், மஞ்சள் வைத்தும் வழிபட்டனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் நாகர் சிலைக்கு பால் ஊற்றுவதற்காக தனி வரிசை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த வரிசையில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றினர்.

கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் இந்து அறநிலையத்துறை பணியாளர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அதோடு கோவிலில் உள்பிரகாரம், வெளிப்பிரகாரம் உள்பட பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன.

வசந்தகுமார் எம்.பி.

ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி நாகராஜா கோவிலில் வசந்தகுமார் எம்.பி. நேற்று வழிபாடு செய்தார். பின்னர் அங்குள்ள நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட்டார். அவருடன் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலரும் வந்து சாமி தரிசனம் செய்தார்கள்.

அன்னதானம்

இதைத் தொடர்ந்து அண்ணா பிறந்த நாளையொட்டி நாகராஜா கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. பொதுப்பணித்துறை சார்பில் நடைபெற்ற இந்த அன்னதான நிகழ்ச்சியில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் பங்கேற்று அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன், சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர் ராஜன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி செயற்பொறியாளர் வசந்தி, அ.தி.மு.க நகர செயலாளர் சந்துரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story