இருமொழி கொள்கையில் அரசு உறுதியாக இருக்க வேண்டும் - கவிஞர் வைரமுத்து பேட்டி


இருமொழி கொள்கையில் அரசு உறுதியாக இருக்க வேண்டும் - கவிஞர் வைரமுத்து பேட்டி
x
தினத்தந்தி 16 Sept 2019 4:30 AM IST (Updated: 16 Sept 2019 2:59 AM IST)
t-max-icont-min-icon

இருமொழி கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து கூறினார்.

நாமக்கல், 

கவிஞர் வைரமுத்துவின் தமிழாற்றுப்படை நூல் அறிமுக விழா நேற்று நாமக்கல்லில் நடந்தது. விழாவுக்கு பி.ஜி.பி.கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பழனி ஜி.பெரியசாமி தலைமை தாங்கினார். நாமக்கல் தமிழ் சங்க தலைவர் டாக்டர் குழந்தைவேல் முன்னிலை வகித்தார். இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

இந்தி தான் இந்தியாவை ஒற்றுமைப்படுத்தும் மொழி என வடக்கே இருந்து ஒரு குரல் கேட்கிறது. தமிழ் சொல்லை நாம் அனைவரும் பாதுகாக்க வேண்டும். பிற மொழிச்சொற்களை களைவதற்கு முயற்சி செய்ய வேண்டும். 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழன் என்ன பேசினானோ, அதை தான் தற்போது நாம் பேசி வருகிறோம். எழுத்துக்கள் முறை மாறி இருக்கலாம். ஆனால் தமிழ் மாறவில்லை. மொழி அடிப்படையில் தான் மாகாணங்கள் பிரிக்கப்பட்டன. நாம் நமது மொழியை இழந்தால் நமது நிலத்தை இழக்க நேரிடும். தமிழ் மொழியிலேயே குழந்தைகளுக்கு பெயர் சூட்டுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

இந்திமொழி தான் இந்தியாவை இணைக்கும் என்ற ஒரு கருத்து உரைக்கப்பட்டு உள்ளது. இதில் தமிழருக்கு மட்டும் அல்ல, இந்தி மொழி பேசாத, எந்த மாநிலத்து மக்களுக்கும் உடன்பாடு இருக்காது. சூரியன் கூட, ஒட்டு மொத்த பூமிக்கும், ஒரே பகலை கொண்டு வந்து இணைக்க முடியவில்லை. இந்தி மட்டும் எப்படி இணைக்க முடியும் என்பது தான் எங்கள் கேள்வி.

இருமொழி கொள்கை என்பது தான், அண்ணா இந்த மண்ணுக்கு வகுத்து கொடுத்த அழியாத ஜீவ கொள்கை. அந்த இருமொழி கொள்கையை தமிழர்கள் உணர்ந்து, உறுதியாக இருப்பார்கள். தமிழக அரசும் உறுதியாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.இவ்வாறு அவர் கூறினார். விழாவில் கவிஞர் சபரிமாலா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, பேராசிரியர் அரசு பரமேஸ்வரன் மற்றும் தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.

Next Story