கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விளையும் தக்காளி வாங்குவதில் கேரள வியாபாரிகள் ஆர்வம்


கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விளையும் தக்காளி வாங்குவதில் கேரள வியாபாரிகள் ஆர்வம்
x
தினத்தந்தி 15 Sep 2019 9:45 PM GMT (Updated: 15 Sep 2019 9:29 PM GMT)

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விளையும் தக்காளியை வாங்குவதில் கேரள வியாபாரிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கம்பம், 

கம்பம் பள்ளத்தாக்கு பகுதிக்கு உட்பட்ட கம்பம், நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, ஆங்கூர்பாளையம், சாமாண்டிபுரம், சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமப்பகுதிகளில் கிணற்றுப்பாசனம், ஆழ்துளை கிணறு பாசனத்தின் மூலம் வாழை, தென்னை, திராட்சை ஆகியவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இவையில்லாமல் தக்காளி, கத்தரி, பீட்ரூட், முள்ளங்கி, கொத்தமல்லி, புடலை, பாகற்காய், முட்டைக்கோஸ், காளிபிளவர் உள்ளிட்ட காய்கறிகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளையும் காய்கறிகள் அதிகளவு கேரளா மாநிலத்திற்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விளையும் தக்காளிகளை வாங்குவதில் வியாபாரிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால் அந்த பகுதியில் தோட்டங்களுக்கு கேரள வியாபாரிகள் நேரில் சென்று தக்காளி காய்களை விலைக்கு வாங்கி செல்கின்றனர். காரணம் தக்காளியை பழமாக வாங்கி செல்லும்போது அவை சீக்கிரமே அழுகி விடுகின்றன. எனவே தக்காளியை காய்களாக இருக்கும்போதே கூடுதல் விலை கொடுத்து வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகளிடம் கேட்டபோது, கேரளாவில் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளதால் அங்குள்ள வியாபாரிகள், இடைத்தரகர்கள் இன்றி கம்பம் பள்ளத்தாக்கு பகுதிக்கு நேரில் வந்து தக்காளியை கொள்முதல் செய்கின்றனர். இதனால் தக்காளி காய்களாக இருக்கும்போதே செடியில் இருந்து பறித்து விற்பனை செய்து வருகிறோம். இதற்கு போதிய விலை கிடைப்பதால் மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.

Next Story