அரசு கல்லூரி நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்லக்கோரி மாணவர்கள் கலெக்டரிடம் மனு


அரசு கல்லூரி நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்லக்கோரி மாணவர்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 16 Sep 2019 11:00 PM GMT (Updated: 16 Sep 2019 5:27 PM GMT)

வேப்பந்தட்டை அரசு கலை-அறிவியல் கல்லூரி நிறுத்தத்தில், அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். அப்போது வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவ- மாணவிகள் சிலர் கலெக்டர் சாந்தாவிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், எங்கள் கல்லூரியில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். நாங்கள் கல்லூரிக்கு வந்து செல்ல போதிய அளவில் அரசு பஸ் வசதி இல்லை. மேலும் கல்லூரி நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்வதில்லை. இதனால் சம்பவத்தன்று பஸ்சில் வந்த மாணவர் ஒருவர் கல்லூரி நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தாததால், வேகமாக பஸ்சை விட்டு இறங்கியதில் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

பஸ்கள் நின்று செல்ல வேண்டும்

இதனை கண்டித்து அன்றைய தினம் சாலை மறியலில் ஈடுபட்டோம். அப்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசார் மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஒரு வார காலத்திற்குள் கல்லூரி நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்வதற்கும், வேகத்தடை அமைக்கவும், மேலும் போதிய அளவு அரசு பஸ் இயக்குவதற்கும் மற்றும் வீரகனூருக்கு நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்து சென்றனர். ஆனால் ஒரு வாரத்திற்குள் மேல் ஆகியும் அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுத்தப்பாடில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

மோசடி

இதேபோல ஒரு தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்த முகவர்கள் கொடுத்த மனுவில், மத்தியபிரதேசம் குவாலியரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த ஒரு தனியார் நிதி நிறுவனம் பெரம்பலூர் மாவட்டத்தில் முகவர்களாக எங்களை நியமித்து, முதலீட்டாளர்களான பொதுமக்களிடம் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை பெற்று நிறுவனத்தில் செலுத்தினால், குறிப்பிட்ட ஆண்டுகள் கடந்தவுடன் வட்டியுடன் திருப்பி தருவதாக கூறினர். நாங்களும் பொதுமக்களிடம் இருந்து பணத்தை வசூலித்து அந்த நிறுவனத்தில் கட்டினோம். ஆனால் அந்த நிதி நிறுவனம் பணத்தை திருப்பி தராமல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

263 மனுக்கள்

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 263 மனுக்களை கலெக்டர் சாந்தா பெற்றுக்கொண்டார். இதையடுத்து அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், மகளிர் திட்ட இயக்குனர் தேவநாதன், உதவி கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சக்திவேல், ஆதிதிராவிடர் நல அலுவலர் மஞ்சுளா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் விஜயன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story