துரைப்பாக்கத்தில் - தண்ணீர் கேன் வியாபாரி கொலை


துரைப்பாக்கத்தில் - தண்ணீர் கேன் வியாபாரி கொலை
x
தினத்தந்தி 17 Sept 2019 3:15 AM IST (Updated: 17 Sept 2019 12:28 AM IST)
t-max-icont-min-icon

துரைப்பாக்கத்தில், தண்ணீர் கேன் வியாபாரி கொலை செய்யப்பட்டார்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சரவணன்(வயது 50). இவர், நேற்று முன்தினம் இரவு துரைப்பாக்கம் கண்ணகிநகரில் உள்ள உறவினர் வீட்டு மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொள்ள வந்தார்.

அப்போது குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் சரவணனை, அதே பகுதியை சேர்ந்த செந்தில்(32), அவருடைய நண்பர்கள் குமரன்(25), குகன்(40) ஆகியோர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுபற்றி சரவணன் தனது மகன் அரிபாபு(25), மருமகன் வெங்கடேசன்(32) ஆகியோரிடம் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த அரிபாபு உள்ளிட்டோர் இதுபற்றி செந்தில் மற்றும் அவருடைய நண்பர்களிடம் தட்டிக் கேட்டனர். இதனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு முற்றி, கைகலப்பானது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

இதில் ஆத்திரம் அடைந்த செந்தில், பிரியாணி செய்ய பயன்படுத்தப்படும் இரும்பு கரண்டியை கொண்டு சரவணனை தாக்க முயன்றார். இதை தடுக்க முயன்ற வெங்கடேசன் தலையில் இரும்பு கரண்டி பலமாக வெட்டியது.

இதில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கொலையான வெங்கடேசன், பெரும்பாக்கம் பகுதியில் தண்ணீர் கேன்கள் வினியோகம் செய்து வந்தார்.

இதுபற்றி கண்ணகிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையான வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக செந்தில், அவருடைய நண்பர்கள் குமரன், குகன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தகராறு செய்ததாக அரிபாபுவையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story