குடிநீர் கேட்டு கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் காலிக்குடங்களுடன் முற்றுகை


குடிநீர் கேட்டு கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் காலிக்குடங்களுடன் முற்றுகை
x
தினத்தந்தி 17 Sept 2019 3:15 AM IST (Updated: 17 Sept 2019 1:52 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் கேட்டு கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டனர்.

நெல்லை,

நெல்லை கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

கீழமுன்னீர்பள்ளம் ஜே.ஜே.நகர்-2 பகுதியை சேர்ந்த பெண்கள் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் ஷில்பாவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், நெல்லை அருகே கீழமுன்னீர்பள்ளம் ஜே.ஜே.நகர்-2ல் 300 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு போதுமான குடிநீர் கிடைப்பதில்லை. எங்கள் பகுதிக்கு தனியாக குடிநீர் தொட்டி அமைத்து சீராக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் ஊருக்கு செல்லும் ரோடு மோசமான நிலையில் உள்ளது. தெருவிளக்குகளும் சரியாக எரியவில்லை. எனவே எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தை திருவள்ளுவர் தெரு, பள்ளிக்கூட தெரு பகுதி மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “எங்கள் பகுதியில் 200 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது கோடை காலம் என்பதால் ஆழ்குழாய் கிணறு வறண்டு மிக குறைந்த அளவே தண்ணீர் கிடைக்கிறது. ஆனால் பிற பகுதிகளுக்கு ஆற்றுகுடிநீர் வழங்கப்படுகிறது. எனவே எங்கள் பகுதிக்கும் ஆற்றுகுடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறிஉள்ளனர்.

நெல்லை மாவட்ட வர்த்தக கழக செயலாளர் ராமகிருஷ்ணன், துணைச் செயலாளர் மாணிக்கம் உள்ளிட்டோர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோட்டில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி மற்றும் பாலம் கட்டும் பணி முடிக்கப்பட்டு 3 வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இந்த வழியாக ஆலங்குளம், தென்காசி பஸ்களை இயக்கவில்லை. இதனால் பொதுமக்கள், முதியோர், பெண்கள், குழந்தைகள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி தெற்கு மவுண்ட் ரோடு வழியாக கடையம், ஆலங்குளம், தென்காசி, புளியங்குடி பஸ்களையும், கனரக வாகனங்களையும் இயக்க அனுமதிக்க வேண்டும்” என்று கூறிஉள்ளனர்.

நெல்லை தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாவீரன் சுந்தரலிங்கனார் பேரவை தலைவர் மாரியப்ப பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி இளைஞர் அணி கார்த்திக், செய்தி தொடர்பாளர் முத்துவளவன் உள்ளிட்டோர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், தூத்துக்குடி மாவட்டம் நாணல்காடு கிராமத்தை சேர்ந்த இசக்கிப்பாண்டி என்பவர் கடந்த 12-ந்தேதி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக நெல்லை தச்சநல்லூர் புதுக்குளத்தை சேர்ந்த சிவன் சண்முகம், சுடலை ஆகியோரை சந்தேகத்தின் பேரில் போலீசார் அழைத்துச்சென்றனர். மேலும் மேலப்பாளையம், படப்பக்குறிச்சி, கீழநத்தம், பொட்டல் ஆகிய கிராமங்களில் இருந்து 12-க்கும் மேற்பட்ட இளைஞர்களை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த இளைஞர்கள் தற்போது எங்கு இருக்கிறார்கள்? என்ற விவரம் தெரியவில்லை. கொலை குற்றவாளிகளை கைது செய்வதில் போலீசார் ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருகின்றனர். எனவே போலீசார் பிடியில் உள்ள அப்பாவி இளைஞர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு கேபிள் டி.வி. சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கொடுத்த மனுவில், “கேபிள் டி.வி. ஒளிபரப்பு தொடர்பாக தெளிவான விதிகளை உருவாக்கி செயல்படுத்த வேண்டும். கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பாதிக்கப்படாமல் தொழில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறிஇருந்தனர்.

பாலாமடை அருகே கட்டளை கிராமத்தை சேர்ந்த பெண்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் தங்களுக்கு சீராக வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர். இதே போல் பல்வேறு தரப்பினர் தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஷில்பாவிடம் வழங்கினர்.

Next Story