5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் - திருவாரூரில் நடந்தது


5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் - திருவாரூரில் நடந்தது
x
தினத்தந்தி 17 Sept 2019 4:00 AM IST (Updated: 17 Sept 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரி திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர்் பெருமன்ற மாவட்ட தலைவர் வீரபாண்டியன் தலைமை தாங்கினார். இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் துரை அருள்ராஜன், மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கல்வி உரிமை சட்டம் உருவாக்குகிற போது பள்ளிக்கு வரும் மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க வேண்டும் என்பதற்காக எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறையை கொண்டு வந்தனர். இச்சட்டத்தால் மாணவர்களின் இடைநிற்றல் குறைந்து பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் குறைந்தது 8-ம் வகுப்பு வரையிலான கல்வியறிவை பெற்றனர். கஸ்தூரிரங்கன் தலைமையிலான கல்விக்குழு சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஏழை எளிய மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கக்கூடிய வகையில் 3, 5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வினை பரிந்துரைத்துள்ளது.

தேசிய கல்வி ஆணையம் என்ற பெயரில் மாநில அரசின் அதிகாரங்களை மத்திய அரசு பறிக்கின்றது. தமிழக அரசு 5, 8-ம் வகுப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டில் இருந்தே பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. தமிழக அரசு உடனடியாக 5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாணவர்-இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் அறிவழகன், பாலமுருகன், பிச்சமுத்து,சிவரஞ்சித், கலை, அஸ்வினி, லெனின், கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல தமிழக அரசு 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரி திருவாரூரில் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சுர்ஜித் தலைமை தாங்கினார். அப்போது 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி மாணவ-மாணவிகள் கோஷங்கள் எழுப்பினர்.

Next Story