சேரியந்தல் கிராமத்தில் கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் பிணம் - கொலையா? போலீஸ் விசாரணை


சேரியந்தல் கிராமத்தில் கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் பிணம் - கொலையா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 17 Sept 2019 3:30 AM IST (Updated: 17 Sept 2019 3:19 AM IST)
t-max-icont-min-icon

சேரியந்தல் கிராமத்தில் உள்ள கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருகில் உள்ள சேரியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் மண்ணு கவுண்டர். இவரது நிலத்தில் பாழடைந்த கிணறு உள்ளது. இதில் சுமார் 5 அடி வரை தண்ணீர் உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கிணற்றின் அருகில் இருந்து துர்நாற்றம் வீசியது. அக்கம்பக்கத்தினர் கிணற்றின் அருகில் சென்று பார்த்தனர். அப்போது கிணற்றில் கவிழ்ந்த நிலையில் ஆண் பிணம் ஒன்று மிதந்தது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக திருவண்ணாமலை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் இறங்கி பிணத்தை மீட்டு வெளியே கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

இறந்த நபருக்கு சுமார் 40 வயது இருக்கும் என்றும், அடையாளம் தெரியாத வகையில் அழுகிய நிலையில் இருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து கிளிப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் திருமலை கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார்? அவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா? அல்லது கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story