ஆரணி அருகே, விவசாயி வீட்டில் 20 பவுன் நகை திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
ஆரணி அருகே விவசாயி வீட்டில் 20 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆரணி,
ஆரணியை அடுத்த குண்ணத்தூர் வீரக்கோவில் தெருவை சேர்ந்தவர் பழனி, விவசாயி. இவருடைய மனைவி வசந்தா. இவர்களின் மகள் காவ்யாவுக்கும் சென்னை மறைமலைநகரை சேர்ந்த சின்னத்திரை இயக்குனர் குணசேகரனுக்கும் நேற்று காலை திருமணம் நடைபெற்றது. இதற்காக குடும்பத்தினர், உறவினர்களுடன் வீட்டை பூட்டிவிட்டு சென்றனர்.
பகல் 1.30 மணிக்கு வீடு திரும்பியபோது வீட்டின் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டும், உள்ளே அறையில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.
பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்கநாணயங்கள், தங்க சங்கிலி, மோதிரம் உள்பட 20 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளிப்பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து பழனி ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில், இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் பசலைராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story