பா.ஜனதா, சிவசேனா தலைவர்கள் காங்கிரசில் சேர விருப்பம் - மாணிக்ராவ் தாக்கரே சொல்கிறார்


பா.ஜனதா, சிவசேனா தலைவர்கள் காங்கிரசில் சேர விருப்பம் - மாணிக்ராவ் தாக்கரே சொல்கிறார்
x
தினத்தந்தி 16 Sep 2019 10:00 PM GMT (Updated: 16 Sep 2019 10:00 PM GMT)

பா.ஜனதா, சிவசேனா கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் காங்கிரசில் சேர விருப்பம் தெரிவித்து உள்ளனர் என மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் மாணிக்ராவ் தாக்கரே கூறியுள்ளார்.

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் ஆதாயத்திற்காக பல முக்கிய தலைவர்கள் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதா, சிவசேனா கட்சிகளில் சேர்ந்து வருகின்றனர். இந்தநிலையில் சிவசேனா, பா.ஜனதா கட்சியை சேர்ந்த தலைவர்கள் காங்கிரசில் சேர விருப்பம் தெரிவித்து உள்ளதாக அக்கட்சியின் முன்னாள் மாநிலத்தலைவர் மாணிக்ராவ் தாக்கரே தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

பா.ஜனதாவை சேர்ந்த 8 தலைவர்களும், சிவசேனாவை சேர்ந்த 15 பேரும் எங்கள் கட்சியில் சேருவது குறித்து பேசினர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கடந்த 2014-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள் ஆவர். அவர்களுக்கு மீண்டும் போட்டியிட பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் வாய்ப்பு கொடுக்காது என நினைக்கின்றனர். எனவே அவர்கள் எங்களை அணுகி உள்ளனர். அவர்கள் எங்கள் கட்சியில் சேர்ந்து சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து கட்சி மேலிடத்துடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்போம்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை முடிந்துவிட்டது. 2 கட்சிகளும் தலா 125 தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகுதிகள் சமாஜ்வாடி, உழவர் உழைப்பாளர் கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கப்படும். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்னும் ஒரு வாரத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வரும் முன் வெளியிடப்படும்.

இந்த தேர்தலில் காங்கிரஸ் புதுமுகங்கள் மற்றும் அடிமட்ட தொண்டர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கும். குறிப்பாக பெண்கள் மற்றும் இளம் தொண்டர்களுக்கு முன்னுரிமை கொடுக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story