தளபதி என பெயர் வைத்ததால் ஸ்டாலின் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபடுகிறார் - அமைச்சர் காமராஜ் சொல்கிறார்
தளபதி என பெயர் வைத்ததால் ஸ்டாலின் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபடுகிறார் என அமைச்சர் காமராஜ் கூறினார்.
திருவாரூர்,
தொடக்க பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான சிறப்பு முகாம் திருவாரூரில் நேற்று நடந்தது. முகாமிற்கு முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு பணிவரன்முறை, சிறப்பு நிலைக்கான ஆணைகளை ஆசிரியர்களுக்கு வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பணிவரன்முறை, தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை தொடர்பாக ஆசிரியர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் 264 மனுக்கள் பெறப்பட்டு முதல் நாளில் 110 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு ஆணைகள் வழங்கப்படுகிறது. ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றுகிற அரசாக தமிழக அரசு திகழ்கிறது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலா பார்த்தசாரதி, வட்டார கல்வி அலுவலர் விமலா, நகராட்சி ஆணையர் சங்கரன், கூட்டுறவு சங்க தலைவர்கள் மூர்த்தி, மணிகண்டன், கலியபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் காமராஜிடம் நிருபர்கள், இந்தி திணிப்புக்கு எதிராக தி.மு.க. அறிவித்துள்ள போராட்டம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிந்தோ, தெரியாமலோ தளபதி என்று பெயர் வைத்து விட்டார்கள். தளபதி என்றால் அடிக்கடி போர் புரியவேண்டுமல்லவா.
அதனால்தான் அவர் தினசரி ஏதாவது ஒரு போரை அறிவித்துக் கொண்டே இருக்கிறார். அவை அனைத்தும் பிசுபிசுத்து
விடுகின்றன. அவர் முன்னெடுக்கும் போராட்டங்கள் ஒரு மாதம் கூட நீடிப்பதில்லை. தி.மு.க. முன்னெடுக்கும் போராட்டங்கள் வலுவான கோரிக்கைகள் இல்லாததால் நீடிப்பதில்லை என்றார்.
கிசான் அட்டைகள் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் நகை கடன் வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது குறித்த கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் கிடைப்பதற்கு வங்கிகள் நடவடிக்கை எடுக்க அரசு சார்பில் சிபாரிசு செய்யப்படும். அதேபோல குறைக்கப்பட்ட மண்ணெண்ணெய் அளவை மீண்டும் வழங்க மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம். மத்திய அரசு வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
தமிழக அரசு பேரறிஞர் அண்ணா வழியில் இரு மொழிக் கொள்கையில் நிலையாக உள்ளது. ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. அதற்குள்ளாகவே அதனை எதிர்ப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்கனவே எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இருந்தது. அதன் மூலம் மாணவர்களின் கல்வி வளர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Related Tags :
Next Story