1,500 பயனாளிகளுக்கு ரூ.10¼ கோடியில் திருமண நிதி உதவி, தாலிக்கு தங்கம் அரசு தலைமை கொறடா வழங்கினார்


1,500 பயனாளிகளுக்கு ரூ.10¼ கோடியில் திருமண நிதி உதவி, தாலிக்கு தங்கம் அரசு தலைமை கொறடா வழங்கினார்
x
தினத்தந்தி 18 Sept 2019 4:30 AM IST (Updated: 17 Sept 2019 10:40 PM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் 1,500 பயனாளிகளுக்கு அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் ரூ.10¼ கோடியில் திருமண நிதிஉதவி மற்றும் தாலிக்கு தங்கம்ஆகியவற்ைறை வழங்கினார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் முதல்- அமைச்சரின் திருமண நிதியுதவித் திட்டம் மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 1,500 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 20 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் திருமண நிதியுதவியுடன், தாலிக்கு தங்க நாணயங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக அரசு, பெண்கள் முன்னேற்றத்திற்காக பல எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மறைந்த ஜெயலலிதா பெண்கல்வியை ஊக்கப்படுத்தவும், பெண்கள் சிறப்பாக வாழவும், பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். அதில் சீர்மிகு திட்டமான ஒன்றுதான் திருமாங்கல்யத்திற்கு நிதியுதவிடன் தங்கம் வழங்கும் திட்டம்.

இத்திட்டம் மூலம் இன்று பல்லாயிரக்கணக்கான ஏழை- எளிய பெண்கள் வாழ்க்கையில் ஒளியேற்றப்பட்டுள்ளது. பெண்கள் கல்வி இடைநிற்றலை தவிர்க்கப்பட்டு பட்டப்படிப்பு வரை பெண்கள் கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.அரியலூர் மாவட்டத்தில் சமூக நலத்துறையின் மூலம் 5 வகையான திருமண நிதியுதவி திட்டம் மற்றும் முதல்- அமைச்சரின் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதில் 10-ம் வகுப்பு படித்த பெண்களுக்கு ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையும், 8 கிராம் தங்க நாணயமும், பட்ட படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையும், 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டு வருகிறது.

உறுதுணையாக இருக்க வேண்டும்

அரியலூர் மாவட்டத்தில் இன்று 10-ம் வகுப்பு படித்த 599 பெண்களுக்கும், பட்ட படிப்பு படித்த 901 பெண்களுக்கும் என மொத்தம் 1,500 பெண்களுக்கு ரூ.6 கோடியே 25 ஆயிரம் மதிப்பிலான நிதியுதவியும், ரூ.4 கோடியே 20 லட்சம் மதிப்பில் 12,000 கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, இந்நலத்திட்ட உதவிகள் பெற்ற பயனாளிகள் தமிழக அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இத்திட்டங்கள் போன்று பல முத்தான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார் நம்முடைய தமிழக முதல்- அமைச்சர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், அரியலூர் மாவட்ட கனிம அறக்கட்டளை நிதியின்கீழ் பிரதான் மந்திரி கனிஜ் ஷேத்ரா கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் அரியலூர் அரசு கலைக்கல்லூரிக்கு ரூ.19 லட்சத்து 62 ஆயிரத்து 930 மதிப்பில் தளவாட பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் மாவட்ட சமூக நல அலுவலர் அன்பு குலோரியா, ஆவின் பால்வள துணை தலைவர் தங்க.பிச்சமுத்து, துணை இயக்குனர் (சுரங்கங்கள்) சரவணன், அரியலூர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் மலர்விழி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story