சுகாதார கேடு விளைவிக்காத ‘பயோ டேங்’ கோவையை சேர்ந்தவரின் புதிய கண்டுபிடிப்பு


சுகாதார கேடு விளைவிக்காத ‘பயோ டேங்’ கோவையை சேர்ந்தவரின் புதிய கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 17 Sep 2019 11:30 PM GMT (Updated: 17 Sep 2019 6:11 PM GMT)

மனித கழிவுகளை அழிக்க, சுகாதார கேடு விளைவிக்காத ‘பயோ டேங்’கை கோவையை சேர்ந்தவர் உருவாக்கியுள்ளார்.

கோவை,

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பதுபோல் வீட்டுக்கு ஒரு கழிப்பறை கட்டுவோம் என்ற புதிய பொன்மொழியை உருவாக்கும் வகையில் மத்திய அரசு, வீட்டுக்கு ஒரு கழிப்பிடம் கட்ட மானியம் வழங்கி வருகிறது.

இதன் மூலம் திறந்தவெளி கழிப்பிடங்கள் இனி இல்லை என்ற நிலையை உருவாக்கி வருகிறது. அவ்வாறு கழிப்பிடங்கள் கட்டி அதற்காக ‘செப்டிக் டேங்’ அமைத்தாலும் அது நிரம்பி வழியும்போது அதை அகற்றுவது என்பது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. அப்படி இல்லாமல் பாதாள சாக்கடையுடன் இணைப்பு கொடுத்தால், அதில் அடைப்பு ஏற்படும்போது பொது இடங்களில் கழிவு நீர் வெளியேறி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.

இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லும் வகையில் கோவையை சேர்ந்த மேக் இந்தியா நிறுவனத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவர் பயோ டைஜஸ்டர் என்ற நவீன டேங்கை வடிவமைத்துள்ளார். இது நவீனமானதுடன், சுகாதாரமானதும், நீர் மறுசுழற்சிக்கும் உதவுவதாகவும் உள்ளது.

இதுகுறித்து மாணிக்கம் கூறியதாவது:-

பயோ டேங், காற்றில்லா நுண்ணுயிர்களின் உதவியுடன் கழிவுகளை அழித்து விடுகிறது. கழிவு நீரை, தண்ணீராக மாற்றியும், வாயுவாக பிரித்தும் வெளியேற்றி விடுகிறது.

இந்த நுண்ணுயிரி, ஆக்சிஜன் இல்லாத இடங்களிலும் குறைந்த ஆக்சிஜன் இருக்கும் இடங்களிலும் இரு்க்கும். மற்ற இடங்களில் அதற்கான சூழலை உருவாக்க வேண்டும்.

மத்திய அரசின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசனையின்படி, டேங் வடிவமைக்கப்பட்டது. டேங்கில் 3 சேம்பர்கள் இருக்கும். முதல் சேம்பரில் காற்றில்லா நுண்ணுயிரி இருக்கும். வெளியேற்றும் குழாய்வரை, தண்ணீர் நின்றுகொண்டே இருக்கும். கழிவுகளை அழித்து வாயுவாக வெளியேற்றி விடும்.

டேங்கில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சுத்தமானது. வாசமற்றதாக இருக்கும் அதை விவசாயத்துக்கு பயன்படுத்தலாம். கோவையில் மட்டும் 1,500 இடங்களில் இந்த பயோ டேங் நிறுவப்பட்டுள்ளது. அதிகபட்சம் 40 ஆயிரம் ரூபாய் செலவழித்தால் வீட்டில் நிறுவிவிடலாம். நிலத்தடி நீர்மட்டம் மேலே இருக்கும் இடங்களில் இந்த டேங் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதன் மூலம் கழிவறை துர்நாற்றத்துக்கு முடிவு கட்ட முடியும். சுற்றுச்சூழலுக்கு ஏற்றது. பராமரிப்பு இ்ல்லை. கொசு தொல்லையும் இல்லை.

தமிழக உள்ளாட்சித்துறை செயலாளர் பிரகாஷ் இதனை பார்வையிட்டுள்ளார். உள்ளாட்சிகளில் இதனை பயன்படுத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story