தனித்தனி விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி


தனித்தனி விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 18 Sept 2019 3:30 AM IST (Updated: 17 Sept 2019 11:45 PM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம், சின்னசேலம் பகுதியில் நடந்த தனித்தனி விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

கண்டாச்சிமங்கலம்,

ரிஷிவந்தியத்தை சேர்ந்தவர் அப்பாதுரை மகன் செந்தில்குமார் (வயது 47). அதே பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (67). இவர்கள் 2 பேரும் கொத்தனார்கள் ஆவர். இந்த நிலையில் இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் தியாகதுருகம் அருகே பிரிதிவிமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கட்டிட வேலை செய்வதற்காக மொபட்டில் புறப்பட்டு சென்றனர். பிரிதிவிமங்கலம் அருகே சென்றபோது பின்னால் வந்த சூளாங்குறிச்சி புதுக்காலனியை சேர்ந்த சந்திரவர்ணன் (36) என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் செந்தில்குமார், ஜெகநாதன் மற்றும் சந்திரவர்ணன் ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் மேல்சிகிச்சைக்காக ஜெகநாதன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம், வெங்கனூர் பாரதி நகரை சேர்ந்தவர் சுரேஷ் (40). தொழிலாளி. இவர் தனது உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சேலம் மாவட்டம் தலைவாசலுக்கு புறப்பட்டு சென்றார். சின்னசேலம் அருகே காலசமுத்திரம் எல்லைபகுதியில் சென்றபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சுரேஷ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் கீழக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story