ஆந்திர-கர்நாடக எல்லையில் குளிர்பானத்தில் விஷத்தை கலந்து குடித்து காதல் ஜோடி தற்கொலை


ஆந்திர-கர்நாடக எல்லையில் குளிர்பானத்தில் விஷத்தை கலந்து குடித்து காதல் ஜோடி தற்கொலை
x
தினத்தந்தி 18 Sept 2019 3:15 AM IST (Updated: 18 Sept 2019 1:19 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திர-கர்நாடக மாநில எல்லையில் குளிர்பானத்தில் விஷத்தைக் கலந்து குடித்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனர்.

கோலார் தங்கவயல்,

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வி.கோட்டா மண்டலம் கெஸ்தினப்பள்ளியைச் சேர்ந்தவர் நீலகண்டா (வயது 32). இவரும், செல்லப்பள்ளியைச் சேர்ந்த லலிதா (28) என்பவரும் 7 ஆண்டுகளாகக் காதலித்தனர். அவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். 4 ஆண்டுகளுக்கு முன்பு லலிதாவின் பெற்றோர் வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து, அவருக்கு திருமணம் செய்து வைத்தனர். லலிதாவுக்கு 2 குழந்தைகள் பிறந்தன.

இந்தநிலையில் 6 மாதங்களுக்கு முன்பு நீலகண்டாவுக்கு, அவருடைய அக்காள் மகளை திருமணம் செய்து வைத்தனர். இதற்கிடையே, தங்களின் காதலை மறக்க முடியாமல் காதல் ஜோடி தவித்தனர். எனினும் லலிதாவும், நீலகண்டாவும் அடிக்கடி யாருக்கும் தெரியாமல் தனிமையில் சந்தித்து தங்களின் காதலை வளர்த்து வந்தனர். திருமணத்துக்குப் பிறகும், இருவரும் தனிமையில் சந்தித்து வருவதைக் கேள்விப்பட்ட இருவீட்டாரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இதனால் காதல்ஜோடி மனவேதனையில் இருந்து வந்தனர்.

இருவரும், நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி வி.கோட்டாவை அடுத்த ஆந்திர-கர்நாடக மாநில எல்லையான கோலார் மாவட்டம் பேத்தமங்களா அருகே குப்பனஹள்ளி கிராமத்தில் உள்ள ஒரு ஏரிக்குச் சென்றனர். வாழ்க்கையில் இணைய முடியாத நாம் சாவிலாவது ஒன்று சேருவோம் எனக் கருதி குளிர்பானத்தில் பூச்சிக்கொல்லி மருந்தைக் கலந்து குடித்து இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.

அந்த வழியாகச் சென்றவர்கள், இதுபற்றி பேத்தமங்களா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காதல் ஜோடியின் பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இரு பிணங்களுக்கு அருகே பூச்சிக்கொல்லி மருந்து (விஷம்) பாட்டில்கள் கிடந்தன. அதை, விசாரணைக்காகப் போலீசார் சேகரித்துள்ளனர்.

இதுபற்றி வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story