ஆற்காடு அருகே, தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 15 பவுன் நகைகள் கொள்ளை - மேலும் 5 வீடுகளின் பூட்டுகளும் உடைப்பு


ஆற்காடு அருகே, தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 15 பவுன் நகைகள் கொள்ளை - மேலும் 5 வீடுகளின் பூட்டுகளும் உடைப்பு
x
தினத்தந்தி 17 Sep 2019 10:00 PM GMT (Updated: 17 Sep 2019 8:11 PM GMT)

ஆற்காடு அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் 5 வீடுகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆற்காடு,

திமிரி அருகே புங்கனூர் கிராமத்தில், பாலமதி ரோட்டை அடுத்த நடுத் தெருவை சேர்ந்தவர் விஜயன் (வயது 46), தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் விஜயன் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிக்கொண்டு தனது குடும்பத்தினருடன் எல்லையம்மன் கோவிலுக்கு சென்று அங்கு தங்கியுள்ளார். பின்னர் நேற்று காலை அனைவரும் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.

மேலும் அதே தெருவை சேர்ந்த உஷா (40) என்பவரும் சென்னையில் உள்ள தனது மகன்களை பார்க்க சென்றுள்ளார். சில நாட்கள் கழித்து நேற்று தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.15 ஆயிரம் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.

இதேபோல் அதே தெருவை சேர்ந்த சக்திவேல் மற்றும் ராமமூர்த்தி மற்றும் மற்றொரு நபருடைய வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த பொருட்கள் கலைக்கப்பட்டு பணம் மற்றும் நகை ஏதேனும் உள்ளதா? என மர்ம நபர்கள் தேடியுள்ளனர். ஆனால் எதுவும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.

மேலும் புங்கனூர் தென்னான்ட தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் சில நாட்களுக்கு முன்பு நடந்த தகராறில் படுகாயம் அடைந்து வாலாஜா அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு துணையாக அவரது மனைவி விஜயலட்சுமியும் மருத்துவமனையில் இருந்துள்ளார்.

இருவரும் நேற்று காலை வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் திருட்டு போனதாக கூறியுள்ளனர்.

பிரகாஷ் தனது வீட்டில் ரூ.5 லட்சம் வைத்திருந்தாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து 6 பேரும் திமிரி போலீசில் தனித்தனியாக புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

வீட்டில் ஆட்கள் இல்லாதபோது நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த துணிகர செயலில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் திருட்டு போனதாக கொடுக்கப்பட்டுள்ள புகார்கள் உண்மையா? எனவும் சம்பந்தப்பட்ட நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story