இரிடியத்தை விற்பதாக கூறி ரூ.1 கோடி சுருட்டல்: மோசடி பணத்தில் பங்குதராததால் நண்பரை கொன்று புதைத்தோம்


இரிடியத்தை விற்பதாக கூறி ரூ.1 கோடி சுருட்டல்: மோசடி பணத்தில் பங்குதராததால் நண்பரை கொன்று புதைத்தோம்
x
தினத்தந்தி 18 Sept 2019 4:00 AM IST (Updated: 18 Sept 2019 2:25 AM IST)
t-max-icont-min-icon

இரிடியத்தை விற்பனை செய்வதாக சுருட்டிய ரூ.1 கோடியில் பங்கு தராததால் நண்பரை கொன்று புதைத்தோம் என்று கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கோவை,

கோவை கந்தேகவுண்டன் சாவடி வேலந்தாவளம் ரோடு குட்டி கவுண்டன்பதி பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 40), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயந்தி தனது கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் செட்டிப்பாளையம் மயிலேறிபாளையத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். 

இதனால் மாரிமுத்து குட்டி கவுண்டன்பதியில் உள்ள தனது தாயார் கருப்பாளுடன் வசித்து வந்தார்.மாரிமுத்து மீது இரிடியம் விற்பனை செய்வதாக கூறி மோசடி செய்வது, பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக மோசடி செய்வது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்தநிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாரிமுத்து திடீரென்று மாயமானார். அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. அவரது தாயார் கருப்பாள் பல இடங்களில் தேடியும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் கோவை சிவானந்தா காலனியை சேர்ந்த சுந்தர் (45), முத்துவேல் (30) ஆகியோர் சரவணம்பட்டி பகுதியில் ரவுடிகளுடன் சேர்ந்து அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார். இதுதொடர்பான படங்கள் வாட்ஸ்-அப் மற்றும் சமூகவலைத்தளங்களில் பரவியது. இதைத்தொடர்ந்து சுந்தரையும், முத்துவேலையும், போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறையில் இருந்தபோது சிலரிடம், ‘ஆளை வெட்டியபோது கைதாகவில்லை. கேக் வெட்டிய போது கைதாகிவிட்டேன்’ என்று சுந்தர் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் சுந்தரிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, இரிடியத்தை விற்பனை செய்வதாக சுருட்டிய ரூ.1 கோடியில் பங்கு தராததால் தங்களது நண்பரான மாரிமுத்துவை கொன்று புதைத்த திடுக்கிடும் தகவல் அம்பலமானது.சுந்தர் கொடுத்த தகவலின்பேரில், அன்னூர் மெயின்ரோட்டில் தேவாங்கபுரம் பகுதியில் மாரிமுத்துவின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை போலீசார் தோண்டினார்கள். கொலை செய்யப்பட்டு 6 மாதங்கள் ஆகியதால் எலும்புக்கூடுகள் மட்டும் மீட்கப்பட்டன.

இந்த வழக்கில் கைதான சுந்தர், முத்துவேல் ஆகியோர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:- மாரிமுத்து இரிடியம் மோசடியில் ஈடுபட்டு வந்தார். கோவில் கலசங்களில் இரிடியம் இருப்பதாக கூறி, அதனை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்று பலரை நம்பச்செய்தார். எங்களுடன் கூட்டாளியாக சேர்ந்த மாரிமுத்து இதன் மூலம் ரூ.1 கோடி பணத்தை பெற்று எங்களுக்கு பங்கு தரவில்லை. இந்த பணத்தை கேட்டோம். ஆனால் கொடுக்கவில்லை. இதனால் அவரை கடத்தி ஒரு வீட்டில் அடைத்து வைத்தோம்.

இதற்கிடையே பணம் கேட்டு கொடுமைப்படுத்தியபோது அவர் இறந்துவிட்டார். இதைத்தொடர்ந்து அவரது உடலை தோட்டத்தில் புதைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டோம்.

இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் கூறியுள்ளனர்.

இந்த கொலை வழக்கில் துப்புதுலக்கியது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் கூறியதாவது:-

மாரிமுத்து கொலை தொடர்பாக துப்புதுலக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் சுந்தர், முத்துவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது ஈஸ்வரன் என்பவர் கைதாகியுள்ளனார். இந்த கொலையில் மேலும் 12 பேருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதில் முக்கிய குற்றவாளியான சரவணம்பட்டியை சேர்ந்த பிரபு தலைமறைவாக உள்ளார். அவர் உள்பட மேலும் 12 பேரை தேடி வருகிறோம். விரைவில் கைது செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இரிடியம் மோசடி ஆசாமியை அவர்களது நண்பர்களே தீர்த்து கட்டிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story