கடலூர், சி.முட்லூர் அரசு கல்லூரியில் மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்


கடலூர், சி.முட்லூர் அரசு கல்லூரியில் மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 17 Sep 2019 10:30 PM GMT (Updated: 17 Sep 2019 9:05 PM GMT)

தேர்வு கட்டண உயர்வை கண்டித்து கடலூர், சி.முட்லூர் அரசு கல்லூரியில் மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

கடலூர், 

கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கல்லூரியில் 1,200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் சுழற்சி முறையில் காலை, மாலை வகுப்புகளில் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை இந்த கல்லூரியில் படித்து வரும் மாணவ-மாணவிகள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தேர்வு கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வு என்ற அறிவிப்பை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். இடமாற்றம் செய்யப்பட்ட நுண்ணுயிரியல் துறை தலைவர் நிர்மல்குமாரை மீண்டும் இந்த கல்லூரியிலேயே பணி அமர்த்த வேண்டும். இந்தியை திணிக்கக்கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.

அவர்களிடம் கல்லூரி நிர்வாகம் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட் டது. இதையடுத்து பெரும்பாலான மாணவர்கள் கலைந்து சென்றனர். ஆனால் நுண்ணுயிரியல் துறை மாணவர்கள் மட்டும் கலைந்து செல்லாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களும் மதியம் 1 மணிக்கு பிறகு கலைந்து சென்றனர்.

இதற்கிடையில் மாலை நேர வகுப்புக்கு வந்த மாணவ- மாணவிகளும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்களை எழுப்பினர். அதன்பிறகு மாலையில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இருப்பினும் மாணவர்களின் போராட்டத்தால் கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகளும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

நேற்று காலையில் வழக்கம்போல் அனைத்து மாணவ-மாணவிகளும் கல்லூரிக்கு வந்தனர். பின்னர் 10.30 மணிக்கு அனைத்து மாணவ-மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு வெளியே வந்தனர். பின்னர் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தேர்வு கட்டணத்தை உயர்த்திய திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை கண்டித்தும், தேர்வு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும், கல்லூரியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரியும், சிதம்பரத்தில் இருந்து அரசு கலைக்கல்லூரிக்கு தனி பஸ் இயக்கக்கோரியும் கோஷமிட்டனர்.

உடனே கல்லூரி முதல்வர் சாந்தி, விரைந்து வந்து மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், உங்களது கோரிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக கூறினார். இதையடுத்து அனைத்து மாணவ-மாணவிகளும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Next Story