அண்ணியுடன் தொடர்பை கைவிட மறுத்ததால் தலையை துண்டித்து தொழிலாளியை கொன்றேன் - கைதான நண்பர் பரபரப்பு வாக்குமூலம்
பள்ளிபாளையம் அருகே, தலை துண்டித்து தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் நண்பர் கைது செய்யப்பட்டார். அண்ணியுடனான தொடர்பை கைவிட மறுத்ததால் தொழிலாளியை கொன்றதாக அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
பள்ளிபாளையம்,
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள நாட்டாகவுண்டன்புதூர் காவிரி ஆற்றில் ஆண் பிணம் சில தினங்களுக்கு முன்பு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கரை ஒதுங்கி கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த பள்ளிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் குமாரபாளையத்தை சேர்ந்த தொழிலாளி சின்ராஜ் (வயது 38) என்பதும், இவரும், இவரது நண்பர் குமாரபாளையத்தை சேர்ந்த கூள குமார் (42) என்பவரும் அடிக்கடி ஒன்றாக சேர்ந்து மது குடித்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சந்தேகத்தின்பேரில் கூள குமாரை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது, அவர் சின்ராஜை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவர் போலீசாரிடம் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
சின்ராஜ் எனது அண்ணியுடன் தொடர்பு வைத்திருந்தார். இதனால் அவரை கடந்த 11-ந் தேதி பள்ளிபாளையம் அருகே சமயசங்கிலிக்கு கூட்டிச்சென்று மது வாங்கி கொடுத்தேன். பின்னர் எனது அண்ணியுடன் உள்ள தொடர்பை விட்டு விடும்படி கூறினேன். அவர் மறுக்கவே எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரத்தில் நான் அவரது வயிற்றில் கத்தியால் குத்தினேன்.
பின்னர் தலையை தனியாக அறுத்து அவரை கொலை செய்தேன். அவரது உடலை ஆற்றில் வீசினேன். தலையை தனியாக பிளாஸ்டிக் பையில் போட்டு அதையும் ஆற்றில் வீசினேன். பின்னர் ஒன்றும் தெரியாதது போல இருந்து கொண்டேன். போலீசார் என்னை பிடித்து விட்டனர். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் போலீசார் சின்ராஜின் தலையை கைப்பற்றினர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story