தி.மு.க. ஆட்சியில் வெளிநாடு சென்றபோது மு.க.ஸ்டாலின் ஏன் வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை? அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி


தி.மு.க. ஆட்சியில் வெளிநாடு சென்றபோது மு.க.ஸ்டாலின் ஏன் வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை? அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி
x
தினத்தந்தி 17 Sep 2019 11:15 PM GMT (Updated: 17 Sep 2019 11:10 PM GMT)

தி.மு.க. ஆட்சியில் வெளிநாடு சென்றபோது மு.க.ஸ்டாலின் ஏன் வெள்ளை அறிக்கை வெளியிட வில்லை என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.

மதுரை,

மதுரை அ.தி.மு.க. வடக்கு 1-ம் பகுதி சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் புதூர் மூன்றுமாவடியில் நடந்தது. பகுதி செயலாளர் அண்ணாநகர் முருகன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் புதூர் கண்ணன் முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

அண்ணா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்-அமைச்சர் ஆனபோது, இந்த வெற்றிக்கு தம்பி எம்.ஜி.ஆர். தான் காரணம் என்று மிகவும் பெருமையாக சொன்னார். மேலும் எனக்கு யாரும் மாலை அணிவிக்க வேண்டாம். ராமாவரம் சென்று எம்.ஜி.ஆருக்கு மாலை போடுங்கள் என்றார். அண்ணாவுக்கு பிறகு எம்.ஜி.ஆர். தயவால் தான் கருணாநிதி முதல்-அமைச்சர் ஆனார். அதன்பின் கருணாநிதி அண்ணாவின் கொள்கைகளை கடைபிடிக்காததால் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கினார். முதல்-அமைச்சர் வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கையை விட வேண்டும் என்று ஸ்டாலின் கூறினார்.

கருணாநிதி 1991-ம் ஆண்டு சிங்கப்பூர், மலேசியா சென்றார். உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது ஸ்டாலின் தாய்லாந்து சென்றார். அப்போது ஏன் வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை. காஷ்மீர் விஷயத்தில் பேசும் தி.மு.க., கச்சத்தீவு விஷயத்தில் மவுனம் காக்கிறது. ஏனென்றால் கச்சத்தீவை தாரை வார்த்ததே தி.மு.க. தான். டி.டி.வி.தினகரன்- ஸ்டாலின் ரகசிய உடன்பாடு வைத்துள்ளனர்.

ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற அவர்களது சதித்திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முறியடித்து விட்டார்.

இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், “தி.மு.க.வை தொடங்கியது அண்ணா. ஆனால் தி.மு.க. முப்பெரும் விழாவில் கூட அண்ணா படம் இல்லை. ஸ்டாலின் படமும், உதயநிதி படமும் தான் உள்ளது. எறும்பு புற்றை கருநாகம் ஆக்கிரமித்து இருப்பதை போல தி.மு.க.வை கருணாநிதி குடும்பம் ஆக்கிரமித்து உள்ளது. தி.மு.க. செய்யாத சாதனைகளை எல்லாம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார். அந்த ஆதங்கத்தில் ஸ்டாலின் பொய்களை பரப்பி வருகிறார். அதற்கெல்லாம் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.” என்றார்.

ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசுகையில், “இங்கே மேடை போட்டிருக்கும் இடத்தில் தான் எம்.ஜி.ஆர். மதுரையில் முதன் முதலாக பேசினார். அந்த இடத்தில் தான் நாம் அண்ணா பிறந்த நாளை கொண்டாடி வருகிறோம். தி.மு.க.வில் உழைத்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர். ஆனால் வாரிசாக இருந்தால் தான் பதவி கிடைக்கும். தமிழக மக்களின் நலனுக்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்த்து வந்தார். ஆனால் ஸ்டாலின் தனது மேன்மைக்காக வெளிநாடு சென்று வந்தார். அதன் மூலம் மக்கள் தொண்டன் யார் என்பதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.” என்றார்.

Next Story