ஒரு மொழிக் கொள்கை இந்திய இறையாண்மைக்கு எதிரானது - முகுல் வாஸ்னிக் குற்றச்சாட்டு


ஒரு மொழிக் கொள்கை இந்திய இறையாண்மைக்கு எதிரானது - முகுல் வாஸ்னிக் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 18 Sept 2019 5:30 AM IST (Updated: 18 Sept 2019 4:56 AM IST)
t-max-icont-min-icon

ஒரு மொழிக்கொள்கை இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதுச்சேரி,

புதுவை மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் நேற்று மாலை 100 அடி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. கூட்டத்திற்கு புதுவை மாநில காங்கிரஸ் கட்சி தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் நாராயணசாமி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளரும், புதுவை மாநில பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடியின் தவறான கொள்கையால் இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளனர். தற்போது மத்திய பா.ஜ.க. அரசு இந்தி, இந்துத்துவம் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்தியா அமைதியான நாடு. இதில் பல்வேறு மொழிகள் பேசக்கூடிய பல்வேறு தரப்பு மக்கள் வசித்து வருகின்றனர்.

ஆனால் மத்திய அரசு நாடு முழுவதும் இந்தி என்ற ஒரு மொழிக் கொள்கையை கொண்டு வந்து திணிக்கின்றது. இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. வானவில்லில் பல வண்ணங்கள் இருப்பதால் தான் அழகாக இருக்கிறது. அனைவரும் பார்த்து ரசிக்கின்றனர். எனவே இந்தி திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும்.

புதுச்சேரியில் வருகிற 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. எனவே நாம் அடுத்த 2 மாதத்திற்குள் கட்சியின் பூத் கமிட்டியை பலப்படுத்த வேண்டும். உறுப்பினர் சேர்க்கையை தீவிரப் படுத்த வேண்டும். அடிக்கடி ஆலோசனை கூட்டங்கள் நடத்த வேண்டும். அதில் எடுக்கும் முடிவுகளை மாவட்ட கமிட்டிக்கு அனுப்ப வேண்டும். மாவட்ட கமிட்டியில் எடுக்கும் முடிவுகளை மாநில கமிட்டிக்கு அனுப்ப வேண்டும். மாநில கமிட்டியின் முடிவுகள் அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு அனுப்பி வைக்கப்படும். 2021-ஆம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தலில் புதுவையில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும். அதற்கு கட்சியை மேலும் பலப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி தலைமையில் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நானும், அமைச்சர் நமச்சிவாயமும் கலந்து கொண்டோம். அந்த கூட்டத்தில் ராஜீவ் காந்தியின் வைரவிழா, மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழாவை எல்லா மாநிலங்களிலும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தெரிவித்தனர். கவிதை, பேச்சுப் போட்டி, ஓவியப்போட்டிகளை நடத்த வேண்டும். காந்திக்கு பிடித்த பாதயாத்திரை செல்ல வேண்டும் என்று கூறினர். மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் அக்டோபர் மாதம் 2-ம் தேதி முதல் இதனை நடத்த உள்ளோம்.

தற்போது இந்தியாவில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமனிடம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், வீடுகளை கட்ட மானியம் கொடுங்கள், கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார். ஆனால் அவர் எதையும் கேட்கவில்லை. எனவே தற்போது பொருளாதாரம் பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது. மோட்டார் துறையில் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. பலர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இப்போது இந்தி திணிப்பை கொண்டு வருகின்றனர். இதனை எதிர்த்து அக்டோபர் மாதம் 15-ம் தேதி முதல் 25-ம் தேதிக்குள் புதுச்சேரியில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத், அமைச்சர் ஷாஜகான், வைத்திலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், விஜயவேணி, தீப்பாய்ந்தான், முன்னாள் முதல்-அமைச்சர் எம்.டி.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story