குன்னூரில், அரசு பஸ்கள் வராததால் மாணவ-மாணவிகள் அவதி


குன்னூரில், அரசு பஸ்கள் வராததால் மாணவ-மாணவிகள் அவதி
x
தினத்தந்தி 19 Sept 2019 3:30 AM IST (Updated: 18 Sept 2019 11:14 PM IST)
t-max-icont-min-icon

குன்னூரில் அரசு பஸ்கள் வராததால் மாணவ-மாணவிகள் அவதியடைந்தனர்.

குன்னூர்,

நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலும் அரசு பஸ்களே இயக்கப்படுகின்றன. ஆனால் சில நகர்புறங்களில் இருந்து கிராமப்புறங்களுக்கு தனியார் மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஊட்டியில் அரசு கலைக்கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்வி நிலையங்களுக்கு குன்னூரில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். இவர்கள் ஊட்டி- குன்னூர் வழித்தடத்தில் காலை நேரத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களையே நம்பி உள்ளனர். ஆனால் நேற்று காலை 7 மணி முதல் காலை 8 மணி வரை மேற்கண்ட வழித்தடத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் மாணவ-மாணவிகள் அவதியடைந்தனர். மேலும் குன்னூர் பஸ் நிலையத்தில் மாணவ-மாணவிகள் உள்பட பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்ததை காண முடிந்தது.

இதற்கிடையில் 1 மணி நேரம் கழித்து 8 மணிக்கு குன்னூரில் இருந்து ஊட்டிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. அந்த பஸ்சில் மாணவ-மாணவிகள் உள்பட பயணிகள் அனைவரும் முண்டியடித்து ஏறினர். இதுகுறித்து மாணவ-மாணவிகள் கூறியதாவது:-

குன்னூர்-ஊட்டி இடையே 18 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இந்த வழித்தடத்தில் குன்னூர் மற்றும் ஊட்டி போக்குவரத்துக்கழக கிளை அலுவலகங்களில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 10 நிமிடங்களுக்கு ஒருமுறை பஸ் இயக்கப்படுவதாக போக்குவரத்துக்கழக அட்டவணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இன்று(நேற்று) 1 மணி நேரம் பஸ் வரவில்லை. இதனால் குறித்த நேரத்துக்கு பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியவில்லை. இதுபோன்ற சம்பவம் அடிக்கடி நடைபெறுகிறது. எனவே தினமும் காலை 7 மணி முதல் காலை 9.30 மணி வரை குன்னூரில் இருந்து ஊட்டிக்கு சீரான முறையில் அரசு பஸ்களை இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story