பஸ்சில் டிக்கெட் இல்லாமல் பயணித்த பார்வையற்ற வாலிபரிடம் ‘கறார்’ ஆக பேசி அபராதம் விதித்த பரிசோதகர்கள் பணியிடை நீக்கம்


பஸ்சில் டிக்கெட் இல்லாமல் பயணித்த பார்வையற்ற வாலிபரிடம் ‘கறார்’ ஆக பேசி அபராதம் விதித்த பரிசோதகர்கள் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 18 Sep 2019 10:15 PM GMT (Updated: 18 Sep 2019 7:05 PM GMT)

அரசு டவுன் பஸ்சில் டிக்கெட் இல்லாமல் பயணித்த பார்வையற்ற வாலிபரிடம் டிக்கெட் பரிசோதகர் மனிதாபிமானம் இன்றி ‘கறார்’ ஆக பேசி அபராதம் விதித்து உள்ளார். இந்த காட்சிகள் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவியதால் நிர்வாகம் டிக்கெட் பரிசோதகர்கள் இருவரை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்து உள்ளது.

திருச்சி,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சி தீரன் நகர் கிளையை சேர்ந்த டவுன் பஸ் ஒன்று கடந்த 11-ந்தேதி திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சத்திரம் பஸ் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் பார்வையற்ற வாலிபர் ஒருவர் பயணம் செய்தார். அந்த வாலிபர் டிக்கெட் வாங்கவில்லை. இந்நிலையில் சத்திரம் பஸ் நிலையத்தை அந்த பஸ் அடைந்தபோது டிக்கெட் பரிசோதகர்கள் 2 பேர் பஸ்சுக்குள் ஏறி பயணிகளிடம் சோதனை செய்தனர்.

அப்போது பார்வையற்ற வாலிபர் டிக்கெட் எடுக்காமல் பயணித்தது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் அவரிடம் பார்வையற்றவர்கள் இலவசமாக பயணம் செய்வதற்காக சலுகை அட்டையும் (பாஸ்) இல்லை.

ரூ.500 அபராதம்

உடனே டிக்கெட் பரிசோதகர்களில் ஒருவர் அந்த வாலிபரிடம் ஏன் டிக்கெட் வாங்கவில்லை என கேட்டார். அதற்கு அந்த வாலிபர், ஐயா நான் பார்வையற்றவன் என்னால் கண்டக்டர் அமர்ந்து இருக்கும் இடத்திற்கு எழுந்து சென்று டிக்கெட் வாங்க முடியாது. கண்டக்டர் என்னிடம் வந்து கேட்டிருந்தால் டிக்கெட் எடுத்திருப்பேன் என்றார்.

ஆனால் டிக்கெட் பரிசோதகர் அதெல்லாம் கிடையாது டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தது உனது தவறு தான். டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ததால் நீ, ரூ.500 அபராதம் கட்ட வேண்டும் என கூறினார்.

வாக்குவாதம்

அதற்கு பார்வையற்ற வாலிபர் என்னால் அபராதம் கட்ட முடியாது. என்னிடம் டிக்கெட் கேட்காதது கண்டக்டரின் தவறு. உங்கள் உயர் அதிகாரியிடம் என்னை அழைத்து செல்லுங்கள் நான் அவரிடம் பேசி கொள்கிறேன் என்றார். ஆனால் டிக்கெட் பரிசோதகர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. நான் தான் இந்த பஸ்சுக்கு அதிகாரி. நான் சொல்வதை கேள். அபராதத்தை கட்டு என குரலை உயர்த்தி ‘கறார்’ ஆக பேசுகிறார். இவர்களுக்கு இடையேயான வாக்குவாதம் நீண்டுகொண்டே செல்கிறது.

பார்வையற்ற வாலிபரிடம் கொஞ்சம் கூட மனிதாபிமானம் இன்றி டிக்கெட் பரிசோதகர் பேசுவதை கண்ட சக பயணி ஒருவர் கண்தெரியாதவரிடம் இப்படி நடந்து கொள்கிறீர்களே? கொஞ்சம் கருணை காட்டக்கூடாதா? என கேட்க பார்வையற்றவர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ய சட்டத்தில் இடம் இல்லை. சட்டத்தில் இடம் இருந்தால் காட்டுங்கள் என பதில் அளிக்கிறார். அதன் பின்னர் சற்று இறங்கி வந்து நீ கண்தெரியாதவன் என்பதால் ரூ.100 அபராதம் செலுத்து போதும், என்கிறார். அபராத தொகை குறைப்பு பற்றி பெண் அதிகாரி ஒருவரிடம் செல்போனில் பேசி ஒப்புதல் பெறுகிறார். அந்த பஸ்சின் கண்டக்டர் கவனக்குறைவாக இருந்ததாக கூறி அவருக்கு விளக்கம் கேட்டு ‘மெமோ’ கொடுக்கிறார்.

பணியிடை நீக்கம்

சுமார் 5 நிமிட நேரம் ஓடக்கூடிய இந்த வீடியோ காட்சிகள் அனைத்தும் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவியது. இந்த காட்சிகளை பார்த்த அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட டிக்கெட் பரிசோதகர்கள் இருவரையும் கும்பகோணத்தில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு நேரில் அழைத்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் ராமச்சந்திரன், ஜெகதீசன் என்ற அந்த 2 டிக்கெட் பரிசோதகர்களையும் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், பார்வையற்ற நபரிடம் டிக்கெட் பரிசோதகர்கள் கடுமையாக நடந்து கொண்டது தவறு தான். அதனால் தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது, என்றார்.


Next Story