நெல்லையில், வழிப்பறியில் ஈடுபட்ட 5 வாலிபர்கள் கைது - மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்


நெல்லையில், வழிப்பறியில் ஈடுபட்ட 5 வாலிபர்கள் கைது - மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 19 Sept 2019 4:00 AM IST (Updated: 19 Sept 2019 1:17 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் வழிப்பறியில் ஈடுபட்ட 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பேட்டை, 

நெல்லை பழையபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 67). ஓய்வு பெற்ற மின்ஊழியர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள மெயின் ரோட்டில் நடை பயிற்சி மேற்கொண்டார்.

அப்போது, அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் 5 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் அரிவாளை காட்டி மிரட்டி கிருஷ்ணனிடம் இருந்து ரூ.2 ஆயிரம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துச் சென்று விட்டனர்.

நெல்லை அருகே உள்ள அரிகேசவநல்லூர் பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் (49) என்பவர் பேட்டையில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் வேலையை முடித்து விட்டு அதிகாலையில் சேரன்மாதேவி ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை மிரட்டி ரூ.1,400, செல்போன் ஆகியவற்றை பறித்துச் சென்றனர்.

பின்னர் அந்த மர்ம நபர்கள் தச்சநல்லூர் மார்க்கெட் ரோட்டில் நடைபயிற்சி மேற்கொண்ட டவுன் கோட்டையடி தெருவைச் சேர்ந்த சுந்தர் (24) என்பவரிடம் இருந்து ரூ.1,260, செல்போனை பறித்து சென்றனர்.

இதுகுறித்து நெல்லை டவுன் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இதில் இந்த வழிப்பறியில் ஈடுபட்டது ஒரே கும்பல் தான் என்பது தெரியவந்தது. மேலும் மோட்டார் சைக்கிள்களின் எண்களை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது நெல்லை டவுன் பகத்சிங் தெருவைச் சேர்ந்த தினேஷ் (19), வயல் தெருவைச் சேர்ந்த தம்பிதுரை (19), கோடீஸ்வரன் நகர் 13-வது குறுக்குத்தெருவைச் சேர்ந்த முகம்மது அஜீஸ் (19), மாதாங்கோவில் தெருவைச் சேர்ந்த சண்முகராஜ் (19), பெருமாள் வடக்கு தெருவைச் சேர்ந்த ஸ்ரீதர் (19) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story