தேனி அருகே பாதை வசதி கேட்டு 3-வது நாளாக குடியேறும் போராட்டம்


தேனி அருகே பாதை வசதி கேட்டு 3-வது நாளாக குடியேறும் போராட்டம்
x
தினத்தந்தி 19 Sept 2019 4:15 AM IST (Updated: 19 Sept 2019 2:30 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுப்பாதை குறித்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், மக்கள் முன்வைக்கும் கோரிக்கைக்கு தீர்வு கிடைக்காமல் அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேனி,

தேனி அருகே சுக்குவாடன்பட்டி இந்திரா காலனி பொதுமக்கள் தங்களுக்கு மாற்று பாதை வசதி கேட்டு, கடந்த 16-ந்தேதி தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி ரத்தினம் நகரில் உள்ள ஒரு புளியந்தோப்பில் குடியேறும் போராட்டத்தை தொடங்கினர். மாற்றுப் பாதை குறித்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், மக்கள் முன்வைக்கும் கோரிக்கைக்கு தீர்வு கிடைக்காமல் அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

3-வது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. நேற்றும் ஏராளமான பொதுமக்கள் புளியந்தோப்பில் சமைத்து சாப்பிட்டு அங்கேயே தங்கினர். மக்களிடம் நேற்று தேனி தாசில்தார் (பொறுப்பு) பிரதீபா தலைமையில் அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், மக்களுக்கு பாதை வசதி குறித்து இந்திரா காலனி பகுதியில் தாசில்தார் ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்து பொம்மையகவுண்டன்பட்டி சாலை பிள்ளையார் கோவில் வழியாக வருவதற்கு உள்ள பாதையை பயன்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், அந்த சாலையை பயன்படுத்தும் போது, இருதரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் தரப்பில் சிலர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் தீர்வு எட்டப்படாமல் நேற்று இரவிலும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தாசில்தாரிடம் கேட்டபோது, ‘சாலை பிள்ளையார் கோவில் வழியாக செல்லும் பாதையை காண்பித்தோம். ஆனால், அதை மக்கள் சிலர் ஏற்க மறுத்துள்ளனர். வேறு பாதை வேண்டும் என்று கேட்கின்றனர். இதுகுறித்த உரிய ஆய்வு மற்றும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது’ என்றார்.

Next Story