கிராமப்புற மேம்பாட்டுத்துறை வங்கியின் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திருட முயன்ற சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது


கிராமப்புற மேம்பாட்டுத்துறை வங்கியின் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திருட முயன்ற சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது
x
தினத்தந்தி 18 Sep 2019 10:15 PM GMT (Updated: 18 Sep 2019 9:07 PM GMT)

காஞ்சார் பகுதியில் கிராமப்புற மேம்பாட்டுத்துறை வங்கியின் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திருட முயன்ற சிறுவர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சார்,

இடுக்கி மாவட்டம் காஞ்சார் பகுதியில் கிராமப்புற மேம்பாட்டுத்துறை வங்கி சார்பாக ஏ.டி.எம்.மையம் உள்ளது. கடந்த 12-ந் தேதி இரவு மர்ம நபர்கள் ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்தனர். பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்றனர். ஆனால் ஏ.டி.எம்.எந்திரத்தை உடைக்க முடியாததால் ஏமாற்றம் அடைந்த மர்ம நபர்கள் திரும்பி சென்றனர்.

இதுகுறித்து புகாரின் பேரில் காஞ்சார் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஏ.டி.எம்.மையத்தில் பதிவாகி இருந்த ரேகைகளை சேகரித்து கொண்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு

இதற்கிடையே மர்மநபர் களை பிடிக்க தொடுபுழா போலீஸ் துணை சூப்பிரண்டு ஜோஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டனர். மேலும் ஏ.டி.எம்.மையம் மற்றும் அருகில் உள்ள வீடுகள், கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அப்போது மர்மநபர்கள் ஒரு காரில் வந்து ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்றது தெரியவந்தது. அந்த காரை துருப்புச்சீட்டாக வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது அந்த கார், தொடுபுழா கோடிகுளம் பகுதியை சேர்ந்த ஷிஜின் (வயது 28) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

கைது

இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து திருட முயன்றதாக அவர் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அவரது கூட்டாளிகள் அங்கமாலி பகுதியை சேர்ந்த ஏலியாஸ் (24), மனு (23), இடபள்ளி பகுதியை சேர்ந்த அபிஜித் (20) மற்றும் 17 வயது சிறுவர்கள் 2 பேர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஏ.டி.எம்.எந்திரத்தை உடைக்க பயன்படுத்திய இரும்பு கம்பிகள், சுத்தியல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Next Story