திருப்பூரில் சாலையில் படுத்து டிராபிக் ராமசாமி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு


திருப்பூரில் சாலையில் படுத்து டிராபிக் ராமசாமி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 Sept 2019 4:30 AM IST (Updated: 19 Sept 2019 3:12 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர், 

தனியார் டி.வி. சார்பில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்வதற்காக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி திருப்பூர் வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை அவர் திருப்பூர்- பல்லடம் ரோட்டில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது சிலர் சாலை விதிகளை பின்பற்றாமல் ஒருவழிப்பாதையில் வந்து கொண்டிருந்தனர்.

இதனை பார்த்த அவர் திடீரென காரில் இருந்து இறங்கி அந்த வழியாக வந்தவர்களின் வாகனங்களை மறித்து அவர்களுக்கு சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்பது உள்பட அறிவுரைகளை கூறிக்கொண்டிருந்தார். இதற்கிடையே அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆசாமி டிராபிக் ராமசாமி மீது மோதுவது போல் வந்து விட்டு, அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அந்த வாகன ஓட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தால் அந்தபகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்நிலையில் டிராபிக் ராமசாமிக்கு ஆதரவாக சிலரும், எதிராக சிலரும் பேசினர். டிராபிக் ராமசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் சிலர்அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து போலீசார் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும் டிராபிக் ராமசாமி பல்லடம் ரோட்டில் சாலை விதிகளை மீறி நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை சாலை விதிகள் படி நிறுத்துமாறு அறிவுறுத்திக்கொண்டே சென்றார். இதனை வாகன ஓட்டிகள் பார்வையிட்ட படி சென்று கொண்டிருந்தனர். ஒரு சிலர் டிராபிக் ராமசாமி வருவதை பார்த்ததும் தலைக்கவசம் உள்ளிட்டவைகளை அணிந்து கொண்டனர்.

Next Story