குடியாத்தம் ரெயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்து போராட்டம் - 24 பேர் கைது


குடியாத்தம் ரெயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்து போராட்டம் - 24 பேர் கைது
x
தினத்தந்தி 19 Sept 2019 3:30 AM IST (Updated: 19 Sept 2019 3:14 AM IST)
t-max-icont-min-icon

இந்தியா முழுவதும் ஒரே மொழி இந்தி மொழியாக இருக்க வேண்டும் என மத்திய உள்துறை மந்திரி கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியாத்தம் ரெயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்து போராட்டம் நடந்தது. இதில் 24 பேரை போலீசார் கைது செய்தனர்.

குடியாத்தம், 

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, சமீபத்தில் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் இந்தியா முழுவதும் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அமித்ஷாவின் கருத்துக்கு எதிராகவும், இந்தி திணிப்புக்கு எதிராகவும் தமிழகம் முழுவதும் தி.மு.க.சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குடியாத்தம் ரெயில் நிலையத்தில் நேற்று மதியம் தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஞானபிரகாசம் தலைமையில் ஏராளமான இளைஞர்கள் இந்தி மொழி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ரெயில் நிலையத்தில் உள்ள பலகைகளில் உள்ள இந்தி எழுத்துகளை கருப்பு மை கொண்டு அழித்தனர்.

தொடர்ந்து அவர்கள் ‘தமிழை காப்போம்’, ‘இந்தி மொழியை திணிக்காதே’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தண்டபாணி, சிங்காரம், தனிப்பிரிவு ஏட்டு ஹரிதாஸ் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட 24 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Next Story