பணி நேரம் முடியும் முன்பே பூட்டப்பட்ட அரசு பள்ளி விளக்கம் கேட்டு முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ்


பணி நேரம் முடியும் முன்பே பூட்டப்பட்ட அரசு பள்ளி விளக்கம் கேட்டு முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ்
x
தினத்தந்தி 18 Sep 2019 10:45 PM GMT (Updated: 18 Sep 2019 10:28 PM GMT)

பணி நேரம் முடியும் முன்பே பூட்டப்பட்ட அரசு பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் மற்றும் அதிகாரிகள், ஒட்டன்சத்திரம் தாலுகா ரெட்டியார்சத்திரம் பகுதியில் செயல்படும் அரசு பள்ளிகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்தனர். பகல் முழுவதும் இந்த ஆய்வு நடந்தது. இந்த நிலையில் மாலை 4.40 மணிக்கு கே.புதுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியை ஆய்வு செய்வதற்காக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் மற்றும் அதிகாரிகள் சென்றனர்.

ஆனால் பள்ளியின் நுழைவு வாயில் பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அக்கம்பக்கத்தில் விசாரித்தனர். அப்போது அன்றைய தினம் பணி நேரம் முடியும் முன்பே பள்ளியை பூட்டிவிட்டு இளநிலை உதவியாளர்கள் மற்றும் அலுவலர்கள் வீட்டுக்குச்சென்றது தெரியவந்தது.

நோட்டீஸ்

இதையடுத்து திண்டுக்கல்லுக்கு அதிகாரிகள் திரும்பினர். பள்ளி பூட்டப்பட்டது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், அரசு பள்ளிகளின் அலுவலக பணி நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆகும். ஆனால் பணி நேரம் முடியும் முன்பே கே.புதுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி பூட்டப்பட்டுள்ளது.

இது குறித்து விளக்கம் கேட்டு பள்ளி தலைமை ஆசிரியர், இளநிலை உதவியாளர் மற்றும் அலுவலர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுத்துள்ளார். 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவேண்டும் என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களின் விளக்கத்தை பொறுத்து மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Next Story