சம்பா சாகுபடிக்கு முறைவைக்காமல் தண்ணீர் திறந்து விட வேண்டும் - கடைமடை விவசாயிகள் கோரிக்கை
சம்பா சாகுபடிக்கு முறைவைக்காமல் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கடைமடை பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்,
டெல்டா மாவட்டங்களாக தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகியவை உள்ளன. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர கோடை நெல் சாகுபடியும் நடைபெற்று வருகிறது. ஆனால், பருவமழை பொய்த்ததாலும், மேட்டூர் அணையில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடாததாலும் முப்போக சாகுபடி பொய்த்து போனது.
இந்த நிலையில் கடந்த மாதம் 13-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் பல்வேறு தடைகளை தாண்டி கடை மடை பகுதியான நாகைக்கு வந்தது. இதையொட்டி நாகை விவசாயிகள் நேரடி விதைப்பு மற்றும் நாற்றங்கால் மூலம் சம்பா சாகுபடி பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நேரடி விதைப்பு மேற்கொள்ளும் விவசாயிகள் நிலத்தை உழுது விதை நெல்லை தூவி தற்போது தண்ணீரை பாய்த்துள்ளனர். அதேபோல நாற்றங்கால் சாகுபடி செய்பவர்களும் புழுதி மண் அடித்து, நாற்றங்கால் தயார் செய்வதற்காக சமப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கடைமடை விவசாயிகள் கூறியதாவது:-
மேட்டூர் அணையில் இருந்து தற்போது 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் சம்பா சாகுபடிக்கு போதுமானதாக இல்லை. எனவே, இதனை 20 ஆயிரம் கன அடியாக திறந்து விட வேண்டும். இந்த தண்ணீரை முறை வைக்காமல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் வரை தொடர்ச்சியாக திறந்து விடவேண்டும். தரமான உரம் மற்றும் பூச்சி மருந்துகள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் விவசாய கடன் வழங்க வேண்டும். அதனை எந்தவித நிபந்தனையும் இன்றி உடனே வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story