சோழங்கநல்லூரில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் - கலெக்டரிடம், விவசாயிகள் கோரிக்கை மனு
சோழங்கநல்லூரில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியம் சோழங்கநல்லூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் நேற்று கலெக்டர் ஆனந்திடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கோட்டூர் சோழங்கநல்லூரில் 2013-ம் ஆண்டு விவசாய நிலங்களில் அரசு ஆய்வு செய்யப்போவதாக கூறி விவசாயிகளிடம் கையெழுத்து பெற்று நிலங்களை ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் கையகப்படுத்தினர். பின்னர் அப்பகுதியில் சாலை அமைத்து எண்ணை, எரிவாயு எடுக்க முயன்றனர். இதனை எதிர்த்தவர்களை அச்சுறுத்தினர். இந்த நிலையில் தற்போது அந்த பகுதியில் விவசாயத்தை அழிக்கும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணிகளை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இதனை தடுப்பதற்கு பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். ஆனால் எங்களது போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததுடன், எங்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். எனவே எங்களது விவசாய நிலங்களை எங்களிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை சோழங்கநல்லூரில் நிறைவேற்றுவதை தடுத்து நிறுத்திட வேண்டும். ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும். பொதுமக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்.
மேலும் வருகிற 30-ந் தேதி முதல் அக்டோபர் 1-ந் தேதி வரை பெண்கள் உள்பட அனைவரும் உண்ணாவிரதம் நடத்திட உள்ளோம். அதனைத் தொடர்ந்து 3-ந் தேதி முதல் தொடர்ச்சியான அறவழி போராட்டங்களை சோழங்கநல்லூர் பகுதி மக்கள் நடத்திட உள்ளோம். இந்த போராட்டங்களுக்கு போலீசார் உரிய அனுமதியை வழங்க வேண்டும். அதற்கும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story