கள்ளக்குறிச்சியில் கார்-லாரி மோதல்; 2 பேர் உடல் நசுங்கி பலி
கள்ளக்குறிச்சியில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி பலியாகினர். இந்த பரிதாப சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
கள்ளக்குறிச்சி,
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 59). இவரது உறவினர் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள கொல்லம்பாளையத்தை சேர்ந்த ராமசாமி மகன் முருகன்(51). இவர்கள் இருவரும் சொந்த வேலை காரணமாக சென்னை செல்ல முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் ரங்கசாமி, முருகன் ஆகியோர் கோபிசெட்டிப்பாளையத்தில் இருந்து ஒரு காரில் சென்னைக்கு புறப்பட்டனர். கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் சாமிநாதன்(34) காரை ஓட்டினார்.
நேற்று அதிகாலை 3 மணி அளவில் கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் உள்ள மேம்பாலம் அருகில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே சென்னையில் இருந்து சேலம் நோக்கி அதிவேகமாக வந்த லாரி, கண்ணிமைக்கும் நேரத்தில் கார் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இதில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய ரங்கசாமி, முருகன் ஆகியோர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். டிரைவர் சாமிநாதன் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து, படுகாயமடைந்த சாமிநாதனை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பின்னர் விபத்தில் பலியான ரங்கசாமி, முருகன் ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்துக்குள்ளான வாகனங்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
இதுகுறித்து ரங்கசாமியின் மகன் தனசேகர்(21) கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் சேலம் மாவட்டம் காரிப்பட்டியை சேர்ந்த பாண்டியன் மகன் சதிஷ்குமார்(26) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story