கட்டளை மேட்டு வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு: நச்சலூர் பகுதிகளில் உழவு பணி தீவிரம்


கட்டளை மேட்டு வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு: நச்சலூர் பகுதிகளில் உழவு பணி தீவிரம்
x
தினத்தந்தி 20 Sept 2019 4:15 AM IST (Updated: 20 Sept 2019 12:42 AM IST)
t-max-icont-min-icon

கட்டளை மேட்டு வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், நச்சலூர் பகுதிகளில் சம்பா நெல் சாகுபடிக்காக உழவு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நச்சலூர்,

மேட்டூர் அணையில் கடந்த ஆண்டு போதிய அளவு தண்ணீர் இல்லாததால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக கட்டளை மேட்டுவாய்க்காலை நம்பி இருந்த கரூர் மாவட்டம், நச்சலூர் இனுங்கூர், நெய்தலூர், சேப்ளாப்பட்டி,கட்டாணிமேடு, பொய்யாமணி ஆகிய பகுதி விவசாயிகள் நெல், வாழை, கரும்பு சாகுபடி செய்யாமல் இருந்தனர். சில விவசாயிகள் ஆழ்துளை கிணறுகள் மூலம் சாகுபடி செய்தனர். இந்த ஆண்டு கர்நாடகா எல்லைப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து அணை முழு கொள்ளளவை எட்டியது. மேலும் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் டெல்டா பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு கட்டளை மேட்டு வாய்க்கால் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டது. தற்போது இந்த வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் நச்சலூர், இனுங்கூர், நெய்தலூர், சேப்ளாப்பட்டி, கட்டாணிமேடு, பொய்யாமணி ஆகிய பகுதி விவசாயிகள் தற்பொழுது சம்பா நெல் சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

உழவுப்பணி தீவிரம்

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டு பருவமழை பெய்யாததாலும், மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு இல்லாததாலும் சம்பா நெல் மற்றும் பல சாகுபடிகள் பாதிப்பு அடைந்தது. இந்த ஆண்டு கர்நாடகாவில் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகளவில் வந்ததால் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் மாயனூரில் இருந்து பிரிந்து புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், பழைய கட்டளை மேட்டுவாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த கட்டளை மேட்டு வாய்க்கால் பாசனத்தை நம்பி உள்ள விவசாயிகள் தற்போது சம்பா நெல் சாகுபடி செய்வதற்காக டிராக்டர்கள் மற்றும் பவர்டில்லர் மூலம் உழும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். பின்னர் நாற்று நடும் பணி நடைபெற்று நெல் நாற்று நன்றாக வளர்ந்த பிறகு தை மாதம் அறுவடை செய்யபடும் என்றனர்.

Next Story