திருச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தாத லாரிகள் வேலைநிறுத்த போராட்டம்


திருச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தாத லாரிகள் வேலைநிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 20 Sept 2019 4:30 AM IST (Updated: 20 Sept 2019 12:51 AM IST)
t-max-icont-min-icon

லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் திருச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பெரும்பாலான லாரிகள் வழக்கம் போல் ஓடின.

திருச்சி,

மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரி விதிப்பிற்குள் கொண்டு வரவேண்டும், சுங்கச்சாவடிகளில் 10 சதவீத கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அமைப்பு செப்டம்பர் 19-ந்தேதி லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தது. இந்த போராட்டத்தினால் இந்தியா முழுவதும் 45 லட்சம் லாரிகள் ஓடாது என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டு இருந்தது.

300 லாரிகள் ஓடவில்லை

திருச்சி பகுதியில் சுமார் 3,500 லாரிகள் உள்ளன. இவற்றில் சுமார் 300 லாரிகள் மட்டுமே நேற்று ஓடவில்லை. அந்த லாரிகள் கீழப்புலிவார்டு சாலையில் உள்ள ஒரு மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. பெரும்பாலான லாரிகள் ஓடின. காந்தி மார்க்கெட்டில் காய்கறிகள், தேங்காய் போன்றவை வழக்கம் போல் இறக்கப்பட்டன. இதே போல் திருச்சியில் இருந்தும் வாழைக்காய் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிய லாரிகள் வெளியிடங்களுக்கு புறப்பட்டு சென்றன.

தாக்கம் இல்லை

இது தொடர்பாக திருச்சி மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது ‘மோட்டார் வாகன சட்டம் திருத்தப்பட்டதை திரும்ப பெற வேண்டும் என்பதில் மாற்றம் இல்லை. அதே நேரத்தில் மாநிலங்கள் தங்களது தேவைக்கு தகுந்தாற்போல் அபராத கட்டணங்களை நிர்ணயித்து கொள்ளலாம் என்று மத்திய அரசு ஒரு சலுகையை அறிவித்தது. இதன் காரணமாக போராட்டம் தீவிரமாக நடைபெறவில்லை. எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை’ என்றார்.

Next Story