புதிய வாகன சட்டத்தை ரத்து செய்யக்கோரி வேலைநிறுத்தம்: குமரி மாவட்டத்தில் 3 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை


புதிய வாகன சட்டத்தை ரத்து செய்யக்கோரி வேலைநிறுத்தம்: குமரி மாவட்டத்தில் 3 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை
x
தினத்தந்தி 20 Sept 2019 4:30 AM IST (Updated: 20 Sept 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

புதிய வாகன சட்டத்தை ரத்து செய்யக்கோரி குமரி மாவட்டத்தில் நேற்று லாரிகள் வேலைநிறுத்தம் நடந்தது. 3 ஆயிரம் லாரிகள் ஓடாததால் ரூ.5 கோடி பொருட்கள் தேக்கம் அடைந்தன.

நாகர்கோவில்,

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், வாகன இன்சூரன்ஸ் கட்டணம் 6 மடங்கு உயர்த்தப்பட்டு இருப்பதை குறைக்க வேண்டும், சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும், சுங்கச்சாவடிகளில் அமைந்துள்ள பகுதிகளில் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும், பெட்ரோல்- டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் நேற்று நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தியது.

இதேபோல் குமரி மாவட்டத்திலும் நேற்று லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தையொட்டி குமரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான லாரிகள் ஓடவில்லை. சில லாரிகள் மட்டும் ஆங்காங்கே இயக்கப்பட்டது. நாகர்கோவில் நாகராஜா கோவில் திடல், வெட்டூர்ணிமடம் உள்ளிட்ட பகுதிகளிலும், லாரி உரிமையாளர்களுக்கு சொந்தமான இடங்களிலும் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

பொருட்கள் தேக்கம்

இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் குமரி மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் பல கோடி ரூபாய் மதிப்பிலான ரப்பர், தேங்காய், தென்னங்கீற்றுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தேக்கம் அடைந்தன.

இதுதொடர்பாக நாகர்கோவில் உள்ளூர் லாரி உரிமையாளர்கள் சங்கம், குமரி மாவட்ட லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் நலச்சங்க மாவட்ட தலைவர் குமரேசன் கூறியதாவது:-

வருவாய் இழப்பு

அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அழைப்பின்பேரில் குமரி மாவட்டத்திலும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டோம். வேலை நிறுத்த போராட்டத்தில் 3 ஆயிரம் லாரிகள், டெம்போக்கள் ஓடவில்லை. ஒரு சில லாரிகள் மட்டும் ஓடின. இந்த போராட்டத்தால் அரசுக்கு பல்வேறு கட்டணங்கள் மூலமாக ரூ.2 கோடி வரையிலான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

லாரிகள் ஓடாததால் குமரி மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்படும் ரப்பர், தேங்காய், தென்னங்கீற்று, அரியவகை மணல் ஆலையில் உள்ள மணல் போன்றவை தேக்கம் அடைந்தன. சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம் அடைந்தன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story