வீட்டுமனை பட்டா கேட்டு சத்தி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


வீட்டுமனை பட்டா கேட்டு சத்தி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 20 Sept 2019 4:30 AM IST (Updated: 20 Sept 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

வீட்டுமனை பட்டா கேட்டு சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சத்தியமங்கலம்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் பகுதியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம் தலைமையில் சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்துக்கு நேற்று பகல் 11 மணி அளவில் வந்தனர். பின்னர் அவர்கள், தங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பியதோடு அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்றனர். மேலும் அங்கு இருந்த தாசில்தார் கார்த்திக் மற்றும் போலீசார், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

வீட்டுமனை பட்டா

அப்போது பொதுமக்கள் கூறுகையில், ‘சத்தியமங்கலம், கொமராபாளையம் பகுதியில் வசித்து வரும் 1000 பேருக்கு கடந்த 2015-ம் ஆண்டு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் பட்டா பெற்றவர்களுக்கு உரிய இடம் ஒதுக்கப்படவில்லை. மேலும் எங்களுக்கு ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

அதனால் பட்டா வழங்கப்பட்டவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு கொடுத்தும், பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதேபோல் பவானிசாகர் பகுதியில் குடியிருந்து வரும் 600 பேருக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. இதனால் அந்தப்பகுதியில் வசிப்பவர்கள் அரசு மானியம் எதுவும் பெறமுடியவில்லை.

வருகிற 2-ந்தேதிக்குள்...

எனவே பட்டா இல்லாதவர்களுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்குவதோடு, உரிய இடத்தையும் காண்பிக்க வேண்டும்’ என்றனர். மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் மனு கொடுக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் கார்த்திக் கூறுகையில், ‘பவானிசாகர் பகுதியில் உள்ள இடங்கள் அனைத்தும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானது. இதனால் இதுதொடர்பாக அந்த துறை மற்றும் மாவட்ட கலெக்டருக்கு கடிதம் அனுப்பி பட்டா வழங்க ஆவன செய்யப்படும். மேலும் சத்தியமங்கலம் கொமராபாளையம் ஊராட்சி பகுதியில் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களுக்கான இடம் விரைவில் ஆய்வு செய்யப்பட்டு இடம் ஒதுக்கப்படும். குறிப்பாக அனைத்து நடவடிக்கைகளும் வருகிற 2-ந்தேதிக்குள் எடுக்கப்படும்’ என்று உறுதி அளித்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மதியம் 2 மணி அளவில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர். 

Next Story