வடகிழக்கு பருவமழையையொட்டி, முல்லைப்பெரியாற்றில் தீயணைப்பு படையினர் மீட்பு பணி ஒத்திகை


வடகிழக்கு பருவமழையையொட்டி, முல்லைப்பெரியாற்றில் தீயணைப்பு படையினர் மீட்பு பணி ஒத்திகை
x
தினத்தந்தி 20 Sep 2019 10:45 PM GMT (Updated: 20 Sep 2019 3:16 PM GMT)

வீரபாண்டி முல்லைப்பெரியாற்றில் வடகிழக்கு பருவமழையையொட்டி தீயணைப்பு படையினர் மீட்பு பணி ஒத்திகை நடத்தினர்.

உப்புக்கோட்டை, 

தேனி மாவட்டம் வீரபாண்டியில் மிகவும் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே முல்லைப்பெரியாறு செல்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் முல்லைப்பெரியாற்றில் நீராடுவது வழக்கம். இதனால் முல்லைப்பெரியாற்றில் குளிப்பவர்கள் மிகவும் கவனமாக குளிக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். இந்நிலையில் வடகிழக்கு பருவமழையையொட்டி, முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மீட்பு பணி மேற்கொள்வது எப்படி என்பது குறித்து தேனி தீயணைப்புத்துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது.

ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, நீச்சல் தெரியாதவர்களை எப்படி காப்பாற்றுவது? என்பது குறித்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு செயல்விளக்கம் செய்து காட்டப்பட்டது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியின்போது ஆற்று வெள்ளத்தில் சிக்கியவர்களை வாழைமரம், ‘லைஃப் ஜாக்கெட்’ போன்றவற்றை பயன்படுத்தி மீட்பது குறித்தும் விளக்கி கூறப்பட்டது.

மேலும் மழைகாலங்களில் பள்ளமான பகுதியில் நீர்தேங்கினால் அதனை வெளியேற்ற அந்த பகுதியில் பொக்லைன் போன்ற எந்திரங்களை தயார் நிலையில் நிறுத்தி வைக்க வேண்டும் என்று தீயணைப்பு படையினர் அறிவுறுத்தினர்.

ஒத்திகை நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், பெரியகுளம் ஆர்.டி.ஓ. ஜெயப்பிரித்தா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் மணிகண்டன், தேனி தாசில்தார் பிரதீபா, வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


Next Story