எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் இளைஞர் அணி செயல்படும் - திருப்பூரில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு


எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் இளைஞர் அணி செயல்படும் - திருப்பூரில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 21 Sept 2019 5:00 AM IST (Updated: 20 Sept 2019 10:51 PM IST)
t-max-icont-min-icon

இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் இளைஞர் அணி செயல்படும் என்று திருப்பூரில் நடந்த இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்து தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

திருப்பூர்,

திருப்பூர் வடக்கு மாவட்ட மற்றும் மாநகர தி.மு.க. சார்பில் தி.மு.க. இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் திருப்பூர் மாநகராட்சி 42-வது வார்டுக்கு உட்பட்ட காட்டுவளவு பகுதியில் நேற்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன் முன்னிலை வகித்தார்.

தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கிவைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

சென்னையில் இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடக்கிறது. 30 லட்சம் இளைஞர்களை உறுப்பினராக சேர்ப்பதற்காக தமிழகம் முழுவதும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்து வருகிறது.

சென்னையில் முகாம்கள் தொடங்கி வைக்கப்பட்டன. இளைஞர் அணி செயலாளராக நான் பொறுப்பேற்ற பின்னர் திருப்பூரில் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி. உங்களின் எழுச்சியையும், மகிழ்ச்சியையும் பார்க்கும்போது 30 லட்சத்தையும் தாண்டி உறுப்பினர் சேர்க்கை இருக்கும்.

இளைஞர் அணியில் சேரும் உறுப்பினர்கள் எந்த நோக்கத்துக்காக எதிர்பார்ப்போடு அணியில் சேர வந்துள்ளீர்களோ, அதுபோல் நிச்சயமாக தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் அமையும். தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டிப்பாக முதல்-அமைச்சர் நாற்காலியில் அமருவார். இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் இளைஞர் அணி செயல்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

உதயநிதி ஸ்டாலினை பார்ப்பதற்காக காட்டுவளவு பகுதியில் ஏராளமானவர்கள் திரண்டு இருந்தனர். உதயநிதி ஸ்டாலின் காரில் இருந்து இறங்கி, மேடைப்பகுதிக்கு சென்றார். அப்போது கடும் நெரிசல் ஏற்பட்டது. உதயநிதி ஸ்டாலினை பார்க்கும் ஆர்வத்தில் சிலர் முண்டியடித்துக்கொண்டு முன்னோக்கி வந்ததால் கடும் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதில் 2 மூதாட்டிகள் கீழே விழுந்து மயங்கினார்கள். அவர்களை அங்கிருந்த தொண்டர்கள் மீட்டு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார்கள்.

அதுபோல் நிகழ்ச்சி நடந்த பந்தல் முன்புறம் மேஜைகள் போடப்பட்டு இருந்தன. அதில் ஒரு மேஜையில் 20-க்கும் மேற்பட்டவர்கள் ஏறி நின்று உதயநிதி ஸ்டாலின் பேச்சை கேட்டுக்கொண்டு இருந்தனர். திடீரென்று பாரம் தாங்காமல் அந்த மேஜை உடைந்து விழுந்ததில் தொண்டர்களும் கீழே விழுந்து காயமடைந்தனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து திருப்பூர் ரெயில் நிலையம் முன்புள்ள பெரியார்-அண்ணா சிலைக்கு உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் இளைஞர் அணி மாநில துணை செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ., தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் மு.பெ.சாமிநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, தி.மு.க. மாநகர பொருளாளர் செந்தூர் முத்து, திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கராஜ், திருப்பூர் மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் பி.ஆர்.செந்தில்குமார், வேலம்பாளையம் பகுதி செயலாளர் ராமதாஸ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜ், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ராஜ்மோகன்குமார், தொ.மு.ச. திருப்பூர் மாவட்ட கவுன்சில் செயலாளர் ஜீவா சிதம்பரசாமி, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முருகேசன், நிர்வாகிகள் மணி, ஆனந்தன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story