திண்டுக்கல்லில் வெளுத்து வாங்கிய மழை, 3 மணி நேரம் மின்தடையால் மக்கள் அவதி
திண்டுக்கல்லில் நேற்று மழை வெளுத்து வாங்கியதால் சாலைகளில் வெள்ளம் ஆறாக ஓடியது. 3 மணி நேரம் மின்தடை செய்யப்பட்டதால் மக்கள் அவதி அடைந்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல்லில் நேற்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. மேலும் அவ்வப்போது வெயில் முகம் காட்டியது. இதற்கிடையே மாலை 6.15 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. பின்னர் நேரம் செல்ல,செல்ல பலத்த மழையாக மாறியது. இந்த மழை சுமார் 1½ மணி நேரம் வெளுத்து வாங்கியது.
இதன் காரணமாக நாகல்நகர் ஆர்.எஸ்.சாலை, மெயின்ரோடு, ஏம்.எம்.சி.சாலை உள்ளிட்ட சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. அதிலும் முழங்கால் அளவுக்கு தண்ணீர் ஓடியதால், இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். நாகல்நகர் பழைய ஆர்.எம்.எஸ்.சாலையில் சாக்கடை கால்வாய் நிரம்பி கழிவுநீருடன், மழைநீர் சேர்ந்து சென்றது.
மேலும் கிழக்கு ரதவீதி, திருமலைசாமிபுரம், நாகல்நகர் சந்தைரோடு, ரவுண்டுரோடு புதூர் பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை மக்கள் பாத்திரங்களை கொண்டு வெளியேற்றினர். இதேபோல் திண்டுக்கல் அருகேயுள்ள பாலகிருஷ்ணாபுரம், வடமதுரை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களிலும் பலத்த மழை பெய்தது.
இந்த நிலையில் மழை பெய்யத் தொடங்கியதும், திண்டுக்கல்லில் மின்சார வினியோகம் தடை செய்யப்பட்டது. சுமார் 3 மணி நேரம் கழித்தே மீண்டும் மின்சாரம் வந்தது. இதனால் திண்டுக்கல் நகரில் பெரும்பாலான பகுதி இருளில் மூழ்கியது. இதன் காரணமாக மக்கள் பெரும் அவதி அடைந்தனர்.
Related Tags :
Next Story