பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 9 பேர் கைது


பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 9 பேர் கைது
x
தினத்தந்தி 21 Sept 2019 4:15 AM IST (Updated: 21 Sept 2019 3:32 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

மீஞ்சூர்,

மீஞ்சூர் பகுதிகளில் மர்மநபர்கள் சிலர் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்வதாக மீஞ்சூர் போலீசாருக்கு தகவல்கள் வந்தது. இந்த நிலையில் மீஞ்சூரை அடுத்த அனுப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே மர்ம கும்பல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்ததால் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு மற்றும் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கஞ்சா விற்பனை செய்த 5 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர்கள் அனுப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 23), தேவதானம் கிராமத்தை சேர்ந்த சூர்யா(22), தோட்டக்காடு மேட்டு காலனியை சேர்ந்த பூவரசன்(23), பிரகாஷ்ராஜ் (22), தாங்கள்பெரும்புலம் பகுதியை சேர்ந்த வல்லரசு(19) என்பதும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. போலீசார் 5 பேரையும் கைது செய்தனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூர்-மீஞ்சூர் வெளி வட்ட சாலை பகுதியில் ஓட்டேரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். வெளிவட்ட சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நின்ற 4 வாலிபர்கள் போலீசார் வருவதை பார்த்ததும் தப்பியோட முயன்றனர். 4 பேரையும் மடக்கிப்பிடித்து விசாரித்தபோது அவர்கள் கையில் 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்ததும், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்றதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து கஞ்சா விற்ற கொளப்பாக்கம் பகுதியை சேர்ந்த பாபு(26), நிதிஷ்குமார்(20), காளிதாஸ்(22), புது பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த வசந்த் (22) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story