கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 20 சதவீதம் விபத்துகள் குறைந்துள்ளது - ஐ.ஜி. பெரியய்யா தகவல்
கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 20 சதவீதம் விபத்துகள் குறைந்துள்ளதாக கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா கூறினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் திருட்டு போன 136 வழக்குகளில் தனிப்படையினர் தீவிரமாக புலன் விசாரணை மேற்கொண்டனர். ரூ.2 கோடியே ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 200 மதிப்புள்ள 3 லாரிகள், 8 கார்கள், 34 இருசக்கர வாகனங்கள், 20 செல்போன்கள் மற்றும் ரூ.41 லட்சத்து 90 ஆயிரம், 360 பவுன் நகைகளை போலீசார் மீட்டுள்ளனர்.
அவ்வாறு மீட்கப்பட்ட களவு சொத்துக்கள் நீதிமன்றம் மூலமாக பெறப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா தலைமை தாங்கினார். சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரதீப் குமார், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மீட்கப்பட்ட நகைகளை உரியவர்களிடம் வழங்கி ஐ.ஜி. பெரியய்யா பேசியதாவது:-
வருமுன் காப்போம் என்பதற்கேற்ப நாம் அனைவரும் குற்றங்கள் நடைபெறாமல் இருக்க முன்கூட்டியே விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். காவல் துறையினர் குற்றங்களை தடுத்தல், நடந்த குற்றங்களில் புலனாய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்து உரிய சொத்துக்களை மீட்டு தருதல், சட்டம் - ஒழுங்கை பராமரித்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். மக்களை பாதுகாப்பதில் காவல் துறையினரின் பங்கு முக்கியமானது.
இந்தியாவில் தமிழக காவல் துறை முதன்மையாக விளங்குகிறது. உலக அளவில் ஸ்காட்லாந்து காவல் துறைக்கு இணையாக தமிழக காவல் துறை உள்ளது.
கோவை மேற்கு மண்டலத்தில் விபத்துகளை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். காவல் துறைக்காக என நினைக்காமல் வாகன ஓட்டிகள் அவர்களுக்காக அதை அணிந்து செல்ல வேண்டும். கோவை மேற்கு மண்டலத்தில் போக்குவரத்தில் எடுக்கப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் காரணமாக விபத்துகள் பெருமளவில் குறைந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் விபத்து 20 சதவீதம் குறைந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் விபத்து 20 சதவீதம் குறைந்துள்ளது. திருட்டு மற்றும் குற்றங்களை தடுக்க சி.சி.டி.வி. கேமராக்கள் கட்டாயம் பொருத்திட வேண்டும். இதன் மூலம் குற்றங்கள் தடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரபாகர் பேசுகையில், கிருஷ்ணகிரி - ஓசூர், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றும், வேகமாக இயக்கப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்த போலீசாரை ஐ.ஜி. பெரியய்யா பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், குற்றப்பிரிவு போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story