நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் 7.69 லட்சம் புதிய பெயர்கள் சேர்ப்பு தேர்தல் ஆணைய அதிகாரி தகவல்
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் 7.69 லட்சம் புதிய பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மும்பை,
மராட்டிய சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) நடைபெற உள்ளது. இதையொட்டி மாநிலம் முழுவதும் புதிய வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்தபிறகு மராட்டியத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்து உள்ளது.
இதில் கடந்த ஏப்ரல்-மே மாதம் முதல் ஆகஸ்டு 31-ந் தேதி வரை 7.69 லட்சம் புதிய பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலின் போது மராட்டியத்தில் 8 கோடியே 86 லட்சத்து 77 ஆயிரத்து 46 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை 8 கோடியே 94 லட்சத்து 46 ஆயிரத்து 211 ஆக உயர்ந்து உள்ளது. அதாவது நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு மராட்டியத்தில் வாக்காளர் எண்ணிக்கை 7 லட்சத்து 69 ஆயிரத்து 165 அதிகரித்து உள்ளது.
இறுதி வேட்பாளர் பட்டியல்
இதில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 4 கோடியே 67 லட்சத்து 37 ஆயிரத்து 841 ஆக உள்ளது. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 4 கோடியே 27 லட்சத்து 5 ஆயிரத்து 777 ஆக உள்ளது. இதேபோல 3-ம் பாலின வாக்காளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 407-ல் இருந்து 2 ஆயிரத்து 593 ஆக அதிகரித்து உள்ளது.
இதேபோல மாற்றுத்திறனாளிகள், வெளிநாட்டு வாழ்இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்ய 10 நாட்களுக்கு முன் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதுவரை புதிய பெயர்கள் சேர்க்கும் பணி தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story