ஆவுடையார்கோவில் அருகே பயங்கரம்: பணத்திற்காக பெண்ணை கொன்று புதைத்த 3 பேர் கைது


ஆவுடையார்கோவில் அருகே பயங்கரம்: பணத்திற்காக பெண்ணை கொன்று புதைத்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 22 Sept 2019 4:45 AM IST (Updated: 21 Sept 2019 11:07 PM IST)
t-max-icont-min-icon

ஆவுடையார்கோவில் அருகே பணத்திற்காக பெண்ணை கொன்று புதைத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆவுடையார்கோவில்,

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே விளானூர் கிராமத்தை சேர்ந்தவர் பால்சாமி. கிராம தலையாரியான இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மனைவி பஞ்சவர்ணம் (வயது 50). இவர் தனது மகன் பால்வண்ணனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் பஞ்சவர்ணம் ஆவுடையார்கோவிலில் உள்ள வங்கியில், தான் அடகு வைத்திருந்த நகையை திருப்புவதற்காக கடந்த 4-ந்தேதி ரூ.3 லட்சத்துடன் சென்றுள்ளார். ஆனால் வங்கிக்கு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

பஞ்சவர்ணத்தை அவரது மகன் பால்வண்ணன் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து பால்வண்ணன் ஆவுடையார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

3 பேர் சரண்

இந்நிலையில் நேற்று முன்தினம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள குமுளூர் கிராமத்தை சேர்ந்த காளிமுத்து (38), விளானூர் கிராமத்தை சேர்ந்த சிவகுமார் (42), மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த லல்லிங்பாய் (25) ஆகிய 3 பேரும் பணத்திற்காக பஞ்சவர்ணத்தை தாங்கள் கொலை செய்ததாக கூறி பொன்பேத்தி வருவாய் ஆய்வாளர் பிச்சைமுத்துவிடம் சரணடைந்தனர்.

உடனே இதுகுறித்து வருவாய் ஆய்வாளர், ஆவுடையார்கோவில் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் விரைந்து சென்று அந்த 3 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

வாக்குமூலம்

விசாரணையின்போது, 3 பேரும் அளித்த வாக்குமூலம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சம்பவத்தன்று பஞ்சவர்ணம் நகையை திருப்புவதற்காக ரூ.3 லட்சத்துடன் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே ஆற்று பகுதியில் சென்று கொண்டு இருந்தார். இதையறிந்த நாங்கள் 3 பேரும் சேர்ந்து அவரை கொலை செய்து பணத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டினோம். அதன்படி, அங்கு ஆள்நடமாட்டம் இல்லாததை பயன்படுத்தி பஞ்சவர்ணத்தை கட்டையால் அடித்து கொன்றோம்.

பின்னர் யாருக்கும் தெரியாமல் அவரது உடலை அப்பகுதியில் குழிதோண்டி புதைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டோம். இந்நிலையில் போலீசார் எங்களை கண்டுபிடித்து விடுவார்கள் என்று பயந்து வருவாய் ஆய்வாளரிடம் சரண் அடைந்தோம் என அவர்கள் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனை

இதையடுத்து அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகிலா மற்றும் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணியன், ரவிச்சந்திரன் மற்றும் போலீசார், பிடிபட்ட 3 பேரையும் சம்பவம் நடந்த பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் பஞ்சவர்ணத்தை புதைத்த இடத்தை காண்பித்தனர்.

பின்னர் பஞ்சவர்ணம் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து ஆவுடையார்கோவில் போலீசார் கொலை வழக்காக மாற்றி காளிமுத்து, சிவகுமார், லல்லிங்பாய் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய காளிமுத்துவும், லல்லிங்பாயும் சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்ததில் நண்பர்கள் ஆகினர். இந்நிலையில் காளிமுத்துவின் தந்தை உடல்நிலை சரியில்லாமல் இருந்ததை அறிந்த லல்லிங்பாய், அவரை பார்ப்பதற்கு ஆவுடையார்கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது இந்த கொலை சம்பவத்தில் அவரும் பங்கேற்றுள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

Next Story