வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: ஈரோடு, கோவை ரெயில்நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு


வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: ஈரோடு, கோவை ரெயில்நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு
x
தினத்தந்தி 21 Sep 2019 10:45 PM GMT (Updated: 21 Sep 2019 7:14 PM GMT)

வெடிகுண்டு மிரட்டல் எதிரொலியாக ஈரோடு மற்றும் கோவை ரெயில் நிலையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இந்த ரெயில் நிலையங்கள் வழியாக சென்ற ரெயில்களிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள்.

ஈரோடு,

சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுப்பாராவுக்கு ஒரு மர்ம கடிதம் வந்தது.அதில் ‘நான் வறுமையில் வாடுகிறேன். எனக்கு வேலை கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சேலம் சந்திப்பு, ஈரோடு, ஜோலார்பேட்டை, காட்பாடி மற்றும் அரக்கோணம் ரெயில் நிலையங்களில் குண்டு வெடிக்கும். இப்படிக்கு மணிவேல்’ என்று கையெழுத்து போடப்பட்டு இருந்தது.

இதையடுத்து சேலம், ஈரோடு, ஜோலார்பேட்டை, அரக்கோணம், போத்தனூர் மற்றும் கோவை ரெயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஈரோடு ரெயில்நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை போலீசார் மெட்டல்டிடெக் டர் மூலம் சோதனை செய்தனர். ரெயில்களிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கோவை ரெயில் நிலையத்தில் தீவிர சோதனை நடைபெற்றது. பாலக்காட்டில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி சென்ற அதிவிரைவு ரெயில், கோவையில் இருந்து சென்னை சென்ற இண்டர் சிட்டி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில்களில், ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருடன் இணைந்து சோதனை நடத்தினர்.

இதே போல போத்தனூர் ரெயில் நிலையத்தில் சென்னையில் இருந்து மங்களூருவுக்கு சென்ற வெஸ்ட்கோஸ் எக்ஸ்பிரஸ் ரெயில், ஆலப்புலாவில் இருந்து சென்னைக்கு சென்ற ஆலப்புலா எக்ஸ்பிரஸ், மங்களூருவில் இருந்து சென்னைக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவற்றில் பயணிகளின் உடமைகளை தீவிர சோதனை நடத்தினர். குறிப்பாக சேலம் வழியாக செல்லும் ரெயில்கள், சேலத்தில் இருந்து வரும் ரெயில்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

மேலும் கோவை, போத்தனூர் ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை தீவிரமாக சோதனை செய்த பின்னரே ரெயில் நிலையத்துக்குள் அனுமதிக்கின்றனர்.

மிரட்டல் கடிதம் எழுதியது யார்? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story